வெளியிடப்பட்ட நேரம்: 12:25 (08/11/2018)

கடைசி தொடர்பு:12:25 (08/11/2018)

தீபாவளியன்று மாணவனுக்கு நடந்த சோகம்! - தீவிர சிகிச்சையில் நண்பர்கள்

தீபாவளியின்போது,  மண்ணில் புதைத்துவைத்துக் கொளுத்திய நாட்டுவெடி திடீரென்று வெடித்ததில், பள்ளி மாணவர் பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த நண்பர்கள்  2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

பலியான மாணவர் மணிவேல்

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகில்  உள்ள வடுகப்பட்டி சக்தி நகரைச் சேர்ந்த கருப்பண்ணன்- சாந்தலட்சுமி தம்பதிக்கு  சக்திவேல், சுந்தரவேல், ஜோதிவேல், மணிவேல் ஆகிய 4 மகன்கள். கடைசி மகனான மணிவேல் (12) அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்துவந்தார். நேற்று முன்தினம் தீபாவளிப் பண்டிகை அன்று, மணிவேல் தனது நண்பர்களான சூர்யா (12), வசந்த் (12) ஆகியோருடன் பட்டாசு வெடித்தார். அப்போது, நாட்டு வெடிகளை மண்ணில் புதைத்துவைத்து வெடித்தனர். அதில், ஒரு நாட்டு வெடியைக் கொளுத்தியபோது, அது வெடிப்பதற்கு காலதாமதமானதால் சந்தேகம் அடைந்த 3 பேரும், மீண்டும் அந்த நாட்டு வெடி அருகே சென்று பார்த்தபோது எதிர்பாராதவிதமாக அந்த வெடி திடீரென வெடித்தது.

அதில் 3 பேரும் சிக்கியதால், அவர்கள் படுகாயம் அடைந்தனர். வெடியின் மிக அருகில் சென்றிருந்த மணிவேல், சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்ற 2 பேரையும் நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில்  சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர  சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இதுகுறித்து சேந்தமங்கலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, மாணவனுக்கு நாட்டுவெடிகுண்டு எப்படிக் கிடைத்தது என்பதுகுறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க