வெளியிடப்பட்ட நேரம்: 12:14 (08/11/2018)

கடைசி தொடர்பு:11:48 (09/11/2018)

மகனின் திருமணப் பத்திரிகையை இப்படி அச்சடித்தது ஏன்? - தந்தை அளித்த ஆச்சர்ய விளக்கம்!

"கடந்த 38 ஆண்டுகளில், நான் தங்களின் இல்லங்களில் பலமுறை சீர்செய்தும், மொய் எழுதியும் உள்ளேன். 1980 முதல் இன்றுவரை, என் குடும்பத்தில் இதுவே முதல் நல்ல காரியம் என்பதால், தாங்கள் பெற்றுக்கொண்ட சீர் அல்லது மொய்யை மொத்தமாகச் செலுத்திவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், தனது மகனின் திருமணத்துக்காக பத்திரிக்கையில் அச்சிட்டிருந்த தகவல் இது. சமூக வலைதளங்களில் முரட்டு வைரலானது.

திருமண பத்திரிகை

கோவை மாவட்டம்  வால்பாறை பகுதி, கல்லார் எஸ்டேட்டைச் சேர்ந்த ஊசிமுத்து என்றழைக்கப்படும் மருதமுத்துவின் மகன் முத்தமிழ்ச்செல்வனுக்குதான் திருமணம். மருதமுத்துவிடம் பேசினோம், "அரியலூர் மாவட்டம், செந்துரைதான் எனக்கு சொந்த ஊர். எம்.ஏ படிச்சிருக்கேன். எஸ்டேட்ல வேலைபார்த்துட்டு இருக்கேன். போட்டோகிராஃபியும் தெரியும். நிறைய கல்யாணம் காச்சிகள போட்டோ எடுத்திருக்கேன். எனக்கு மூனு பொண்ணுங்க, ரெண்டு பசங்க. என் சொந்தத்துல நடக்கிற எல்லா நிகழ்ச்சிலயும் கலந்துப்பேன். தவறாம சீர்வரிசையும், மொய்யும் செய்துட்டு இருக்கேன். என்னோட ஒரு பொண்ணு 1990ல இறந்துட்டா. அதுக்கு 140 ரூபாய்தான் கட்ட மொய் (இறப்பு வீட்டில் வைக்கப்படும் மொய்) வந்துச்சு. இதனால, அதுக்கப்பறம் என் அப்பா, அம்மா இறந்தப்பகூட சொந்த ஊர்லதான் இறுதி காரியங்கள் பண்ணேன்.


 

என்னோட ரெண்டு பொண்ணுங்க, ஒரு பையன் லவ் மேரேஜ் தான் பண்ணாங்க. அதனால, அவங்களுக்கு நான் விழா ஏதும் நடத்தல. இப்ப கல்யாணம் நடந்தது கடைசி பையனுக்கு. இதுதான் என் வீட்ல நடந்த முதல் நிகழ்ச்சி. அதுக்காகத்தான் பத்திரிகைல அப்படி சொல்லிருந்தோம். மண்டபம், சாப்பாடுனு எல்லாத்துக்கும் சேர்த்து ஒரு லட்ச ரூபாய்க்கு மேல செலவாய்டுச்சு. நான் இதுவரை 5 லட்ச ரூபாய்க்கு மேல மொய் வெச்சிருக்கேன். எல்லாத்தயும் கரெக்டா டைரிலயும் எழுதி வெச்சுருக்கேன். ஆனா, எங்களுக்கு 75 ஆயிரம் ரூபாய் தான் மொய் வந்திருக்கு" என்றார்.