வெளியிடப்பட்ட நேரம்: 12:50 (08/11/2018)

கடைசி தொடர்பு:12:50 (08/11/2018)

`பட்டா'வுக்காக அதிகரிக்கும் போலி வாக்காளர்கள்! ஸ்ரீபெரும்புதூரில் அதிர்ச்சி

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ளது செரப்பணஞ்சேரி ஊராட்சி. இங்கு, அரசு நிலங்களில் குடியிருப்புப் பட்டா பெறுவதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட போலி வாக்காளர்கள் உள்ளதாக அப்பகுதியினர் தெரிவிக்கிறார்கள்.

வாக்காளர் பட்டியல்

இதுகுறித்து நம்மிடம் பேசிய செரப்பணஞ்சேரி பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம், “செரப்பணஞ்சேரி ஊராட்சியில் 3000 வாக்குகள் இருக்கின்றன.  இதில், 400-க்கும் மேற்பட்டவர்களுக்கு தவறான முகவரி, பெயர், கணவர் பெயர் என வாக்காளர் அடையாள அட்டையில் இருக்கிறது. பல முறை அதிகாரிகளுக்கு மனு அளித்தோம். அதன் விளைவாக அவ்வப்போது சிலருக்கு திருத்தம் செய்து கொடுத்துள்ளார்கள்.

சண்முகசுந்தரம் செரப்பணஞ்சேரி ஆனால், இன்னும் 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு தவறான முகவரி, பெயர், புகைப்படம் ஆகியவை உள்ளன. உதாரணமாக, ராணி என்பவருக்கு கணவர் பெயர் பாரதியார் சாலை என்றும், பாலாஜி என்பவருக்கு, பெண்ணின் புகைப்படத்தையும் வைத்திருக்கிறார்கள். ஒருவருக்கு இரண்டு அடையாள அட்டைகள் இருக்கின்றன. இரண்டு பேருக்கு ஒரே எண்ணில் அடையாள அட்டை இருக்கின்றன. இப்படி ஏகப்பட்ட குளறுபடிகள் உள்ளன. நாவலூர் பகுதியில் இருக்கும் 300 பேர், மாதா கோயில் தெருவில் இருப்பதாகப் பதிவுசெய்திருக்கிறார்கள். விருகம்பாக்கம் கிராமத்தில் இருப்பவர்கள் சிலர் ஆரம்பாக்கம் கிராமத்தில் புறம்போக்கு நிலங்களை வைத்துள்ளனர். இந்த இடங்களுக்கு பட்டா பெறுவதற்காக, வீட்டுவரியையும் மின் இணைப்பையும் வைத்து வாக்காளர் அடையாள அட்டையில் தங்கள் பெயரை சேர்த்துக்கொள்கிறார்கள். போலி வாக்காளர்கள் இருப்பதால், கள்ள ஓட்டு போடுவதற்கு வசதியாக அமைந்துவிடும். மாவட்ட ஆட்சியர், காஞ்சிபுரம் கோட்டாட்சியர், தேர்தல் ஆணையம், சி.எம்.செல் எனப்பல்வேறு தரப்பினருக்கும் புகார் அளித்துள்ளேன். தேர்தலுக்கு முன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்”  என்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க