வெளியிடப்பட்ட நேரம்: 13:50 (08/11/2018)

கடைசி தொடர்பு:13:50 (08/11/2018)

காய்ச்சலுக்கு நாட்டு மருந்து! - குழந்தையின் உயிரைப் பறித்த உறவினர் ‘அட்வைஸ்’

காய்ச்சல், தீராத வயிற்றுப்போக்கு இருந்த குழந்தைக்கு நாட்டு மருந்து கொடுத்ததால், அக்குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

குழந்தை

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த ஆலங்காயம் கொட்டாவூரைச் சேர்ந்தவர் சக்தி (27), வெல்டிங் தொழிலாளி. இவரின் மனைவி இளவரசி (23). திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. அவர்களுக்கு, பிருத்திவிராஜ் என்ற 9 மாத கைக்குழந்தை இருந்தான். குழந்தைக்கு ஓரிரு நாள்களாகக் காய்ச்சல் மற்றும் தீராத வயிற்றுப்போக்கு இருந்தது. இதுபற்றி வாணியம்பாடி வெல்லக்குட்டை நென்னேரி கிராமத்தில் வசிக்கும் தனது பெரியம்மாள் ஜெயலட்சுமியிடம் இளவரசி கூறினார்.

அவர், ‘குடியாத்தம் தாழையாத்தம் பகுதியில் உள்ள நாட்டு மருந்து வைத்தியசாலைக்கு குழந்தையை தூக்கிச்செல்’ என்றார். இளவரசி மற்றும் அவரது கணவர் இருவரும் இன்று காலை குழந்தையைத் தூக்கிக்கொண்டு நாட்டு மருந்து கொடுக்கும் இடத்திற்குச் சென்றனர். நாட்டு மருந்து கொடுப்பவர், குழந்தைக்கு முதலில் கயிறு ஒன்றைக் கட்டினார். பிறகு, மருந்து கொடுத்தார். அடுத்த சில நிமிடங்களில் குழந்தை பிரித்திவிராஜ் மூச்சுப் பேச்சின்றி மயங்கினான். அதிர்ச்சியடைந்த பெற்றோர், குழந்தையை குடியாத்தம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர்.


அங்கு பரிசோதனைசெய்த டாக்டர்கள், குழந்தை இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். குழந்தையின் உடலை மடியில் ஏந்திப் பெற்றோர் கதறி அழுதனர். காய்ச்சலடித்த குழந்தையை மருத்துவமனைக்கு தூக்கிச்செல்லாமல், உறவினரின் ‘அறிவுரை’ கேட்டு நாட்டு மருந்து கொடுத்து குழந்தையின் உயிரிழப்புக்குப் பெற்றோரும் ஒரு காரணமாக  அமைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.