வெளியிடப்பட்ட நேரம்: 14:10 (08/11/2018)

கடைசி தொடர்பு:14:10 (08/11/2018)

ஸ்கூலுக்கு படகு சவாரி! - தனித் தீவாய் மாறிய அவுரிக்காடு #Shame

நாகப்பட்டினம் மாவட்டத்தில், வயல்களில் தேங்கிய மழைநீர் வடிவதில் ஒவ்வோர் ஆண்டும் சிக்கல் நீடித்துவருகிறது. வடகிழக்குப் பருவமழை தொடங்கியவுடன், நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள அவுரிக்காடு-வண்டல் இடையே அடப்பாற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும்.

இந்நிலையில், சில நாள்களுக்கு முன் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதையொட்டி, தண்ணீர் சூழ்ந்து தீவாகக் காட்சியளிக்கும் தலைஞாயிறை அடுத்த வண்டல் மற்றும் குண்டூரான்வெளி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள், சாலை வழியாக பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

இதுநாள் வரை டிராக்டரில் பள்ளிகளுக்குச் சென்றுவந்த மாணவர்கள், தற்போது படகைப் பயன்படுத்தி அருகில் உள்ள அவுரிக்காடு ஊராட்சி ஒன்றிய பள்ளிக்குச் சென்றுவரும் நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்களும் தங்களின் வழக்கமான பணிகளைப் படகின் உதவியுடனேயே செய்யமுடிகிறது.

அவுரிக்காடு - வண்டல் கிராமங்கள் பருவமழைக் காலத்தில் வெள்ள நீரால் சூழப்படுவதும், கிராமத்தினர் போக்குவரத்து இல்லாமல் பாதிக்கப்படுவதும் தொடர்ந்துவருகிறது. இதைத் தவிர்க்க, அடப்பாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் தொடங்கிய மழையால் அடப்பாற்றில் வெள்ளம் அதிகரித்துள்ளதால், மக்கள் ஆற்றை நடந்து கடப்பது பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, படகுப் பயணம் தொடங்கப்பட்டுள்ளது. படகில் பயணிக்கும் மக்களிடம் கட்டணம் பெறுவதாகக் கூறப்படுகிறது. 'பொதுமக்களிடம் கட்டணம் வசூலித்தாலும் பரவாயில்லை, பள்ளி மாணவர்களிடம் கட்டணம் பெறாமல் படகில் பயணிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க