வெளியிடப்பட்ட நேரம்: 14:50 (08/11/2018)

கடைசி தொடர்பு:14:50 (08/11/2018)

காதல் மனைவியை கழுத்தறுத்துக் கொன்ற கணவன்! - சண்டையால் நடந்த விபரீதம்

ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் புதுக்குடியிருப்பு கிராமத்தில், மனைவியை கழுத்தறுத்துக் கொலைசெய்த மீனவரை போலீஸார் தேடிவருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட மனைவி

ராமநாதபுரம் மாவட்டம், அழகன்குளம் புதுக்குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் முனியசாமி. மீனவரான இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மீன்பிடித் தொழில் செய்வதற்காக துபாய்க்குச் சென்றுள்ளார். அங்கு மீன்பிடித் தொழில் செய்தபோது, அங்குள்ள சேக் ஒருவரின் வீட்டில் வேலைபார்த்துவந்த திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த  மும்தாஜ் என்பவரைக் காதலித்துள்ளார். இதைத் தொடர்ந்து, 10 ஆண்டுகளுக்கு முன் இருவருக்கும் இடையே திருமணம் நடந்துள்ளது. இதன் பின்னரும் துபாயிலேயே இருவரும் வேலைபார்த்துவந்த நிலையில், அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்தக் குழந்தை ஓரளவு வளர்ந்த நிலையில், புதுக்குடியிருப்பில் உள்ள தனது பெற்றோரின்  பொறுப்பில் விட்டுவிட்டு, மீண்டும் துபாய்க்குச் சென்றுவிட்டார் முனியசாமி. இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன், சொந்த ஊருக்குத் திரும்பி, முனியசாமியும் மும்தாஜும் குழந்தையுடன் வசித்துவந்துள்ளனர். கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது. இதுகுறித்து தேவிபட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, போலீஸார் கணவன்- மனைவி இருவரிடமும் விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில், இன்று காலை சமையலறையில் இருந்த மும்தாஜை முனியசாமி திடீரெனக் கீழே தள்ளி, கழுத்தை அறுத்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கிய மும்தாஜ் பரிதாபமாக உயிரிழந்தார். மும்தாஜின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் வசிப்பவர்கள் வந்து பார்த்தபோது, மும்தாஜ் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த தேவிபட்டினம் போலீஸார், கொலைசெய்யப்பட்ட மும்தாஜின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்திவரும் போலீஸார், தப்பி ஓடிய மும்தாஜின் கணவர் முனியசாமியைத் தேடிவருகின்றனர்.