வெளியிடப்பட்ட நேரம்: 15:25 (08/11/2018)

கடைசி தொடர்பு:15:25 (08/11/2018)

"சகாயம் சொன்னார்...1000 பனைவிதைகளை விதைத்தோம்!" - கரூரில் பசுமைத் தீபாவளி கொண்டாட்டம்

 " 'இயற்கையைக் காக்குறதுதான் நம்ம முக்கிய செயல்பாடா இருக்கணும்'னு சகாயம் சார் எங்ககிட்ட அடிக்கடி சொல்றார். அதனால், கரூர் மாவட்டத்தில் 1000 பனைவிதைகளை விதைத்து, 'பசுமைத் தீபாவளி' கொண்டாடினோம்" என்று உற்சாகம் ததும்பப் பேசுகிறார்கள், 'மக்கள் பாதை' அமைப்பைச் சேர்ந்தவர்கள்.

பனைவிதை விதைக்கும் மக்கள் பாதை அமைப்பினர்

மக்கள் பாதை இயக்கம் என்பது தமிழகம் முழுக்க இயங்கிவரும் சமூக செயல்பாடுகளை முன்னெடுக்கும் அமைப்பாகும். இந்த அமைப்பு, நேர்மைக்குப் பெயர்பெற்ற சகாயம் ஐஏஎஸ் வழிகாட்டுதலோடு இயங்கிவரும் அமைப்பாகும். இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள், தமிழகம் முழுக்க இயற்கையைக் காக்கும் செயல்களில் மும்முரமாகச் செயல்பட்டுவருகிறார்கள். அந்த வகையில்தான், கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் உள்ள வீரராக்கியம் ஏரிக்கரையில், மக்கள் பாதை அமைப்பின் சார்பில் 1000 பனைவிதைகள் விதைக்கப்பட்டன. மக்கள் பாதை அமைப்பின் சார்பில் சகாயம் ஆலோசனையின் பேரில், 'தாய்மண் திட்டம்' என்ற பெயரில் இப்படி நீர்நிலைகளில் பனைவிதைகளை விதைத்துவருகிறார்கள். கரூரில் நடைபெற்ற இந்தப் பனைவிதைப்பு நிகழ்ச்சியை மக்கள் பாதை மாநிலத் தலைவர் நாகல்சாமி ஐஏஎஸ் தொடங்கி வைக்க, மக்கள் பாதை அமைப்பைச் சேர்ந்தவர்கள் 1000 பனைவிதைகளை விதைத்து அசத்தினர். இந்த நிகழ்ச்சியில், சிறுவன் ஒருவனும் பனைவிதை நட்டு அசத்தினான்.

பனைவிதை

இது சம்மந்தமாக நம்மிடம் பேசிய மக்கள் பாதை அமைப்பின் கரூர் நகர பொறுப்பாளர் ஜெய்சுந்தர், `` மக்கள் பாதை இயக்கத்தோட குறிக்கோள்... இயற்கையைப் பாதுகாப்பது, இயற்கையை உருவாக்குவது சம்பந்தமாக மட்டுமே இருக்கணும். மக்கள் பாதை அமைப்பு, மக்களை விட்டு என்றைக்கும் விலகக் கூடாது' என்று சொல்வார் சகாயம். அதனால்தான், தமிழகம் முழுக்க எங்கள் அமைப்பினர் ஏரியைத் தூர் வாருவது, மரக்கன்றுகள் நடுவது என முன்னெடுப்புகளைச் செய்துட்டு வர்றோம். அப்புறம், சகாயம் தொடங்கிவைத்த தாய்த்தமிழை வளர்த்தெடுக்கும் முயற்சியான 'தமிழில் கையெழுத்து இடுவோம்'ங்கிற முயற்சியையும் செய்துகிட்டு வர்றோம்.

இந்நிலையில்தான், தீபாவளியை பசுமைத் தீபாவளியாகக் கொண்டாடும்விதமாக 1000 பனைவிதைகளை விதைத்து, வீரராக்கியம் ஏரிக்கரையைப் பசுமையாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறோம். இந்தப் பனைவிதைகள் விதைப்புசெய்யும் நிகழ்ச்சியை மக்கள் பாதை இயக்கத்தைச் சேர்ந்த மகாமணி மற்றும் கிருஷ்ணராயபுரம் ஒன்றியப் பொறுப்பாளர் சீனிவாசன் உள்ளிட்டவர்கள் ஒருங்கிணைத்தார்கள். 50-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டார்கள். பனைவிதைகளை விதைப்பதோடு நிற்காமல், கடைசிவரை அந்தப் பனைவிதைகள் முளைத்து மரமாகும் வரை அவற்றை எங்கள் கண்காணிப்பிலேயே வைத்திருப்போம். நம்ம பனைமரத்தை நாம வளர்க்கலன்னா வேற யாரு வளர்ப்பா சார்" என்றார்.