வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (08/11/2018)

கடைசி தொடர்பு:14:30 (08/11/2018)

`விஷப்பரீட்சையில் ஈடுபடாதீர்கள்!' - கமலுக்கு கிருஷ்ணசாமி எச்சரிக்கை

கமல்ஹாசன்- கிருஷ்ணசாமி

நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசனின் பேட்டி,  சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஒளிபரப்பானது. அதில், நெறியாளரின் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்துப் பேசிய கமல், ’தேவர் மகன் - 2’ படம் எடுக்கும் திட்டம் இருப்பதாகத் தெரிவித்தார். அதையடுத்து அவரது பேட்டி சர்ச்சையானது

 நடிகர் கமல்ஹாசன், தனது 64-வது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், அவருக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ள புதியதமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, 'தேவர் மகன் -2' குறித்தான தனது எதிர்ப்பையும் வெளிப்படுத்தியுள்ளார். 

“ 'தேவர் மகன் -1' படத்தால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் தேவேந்திரகுல வேளாளர்கள். அந்த மோதலால் எண்ணற்ற தேவேந்திரகுல வேளாளர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். அவர்களுடைய சொத்துகள் சூறையாடப்பட்டிருக்கின்றன. ஒட்டுமொத்த சமுதாயத்தினுடைய சுயமரியாதை பல இடங்களில் கேள்விக்குறியாக்கப்பட்டிருக்கிறது. அதற்கு நாங்கள் உங்களிடம் நஷ்ட ஈடே கேட்க வேண்டும். எங்களை அந்த நிலைக்குத் தள்ளிவிடாதீர்கள். அதேபோன்று பெயரிட்ட வேறு எந்தப் படத்தையும் இனி தேவேந்திரகுல வேளாளர்கள் சகித்துக்கொள்ள மாட்டார்கள். தயைகூர்ந்து இனியொரு விஷப்பரீட்சையில் ஈடுபடாதீர்கள். தேவேந்திரகுல வேளாளர்களுடைய பெருமையை விளக்கும் வகையில் நீங்கள் படம் ஒன்றை எடுக்க வேண்டும். அது, நீங்கள் ஏற்கெனவே செய்த தவற்றைச் சரிசெய்வதாக இருக்கும். அந்த வகையில், நீங்கள் இப்போது எடுக்கக்கூடிய படத்தை ’தேவேந்திரர் மகன்’ என்று பெயரிடுங்கள். இல்லையென்றால், `சண்டியர்' படத்துக்கு நாங்கள் தெரிவித்த எதிர்ப்பைவிட இதற்கு கூடுதலாக எதிர்ப்பு தெரிவிக்கும் சூழல் உருவாகும். அந்தப் படம் முடங்கும்” என்று தனது அறிக்கையில் காட்டமாகப் பதிவுசெய்துள்ளார்.