வெளியிடப்பட்ட நேரம்: 14:24 (08/11/2018)

கடைசி தொடர்பு:14:30 (08/11/2018)

``போனஸ் பணத்தில் முறைகேடா..!?"  - சிடுசிடு எடப்பாடி... கடுகடு விளக்க வளர்மதி

வழக்கமாக, தலைமைக் கழகத்தில் வைத்துத்தான் பணத்தை விநியோகம் செய்வது வழக்கம். இந்த முறை கே.கே.நகரில் உள்ள வளர்மதி வீட்டில் வைத்தே பணத்தை விநியோகித்தனர். அதையும் அவர் வீட்டில் உள்ள உதவியாளர்கள்தான் கொடுத்தனர்.

``போனஸ் பணத்தில் முறைகேடா..!?

அ.தி.மு.க தலைமைக் கழகப் பேச்சாளர்கள் மத்தியில் பெரும் புகைச்சல் கிளம்பியிருக்கிறது. `இரண்டாண்டுகளாக எந்தவிதக் கூட்டங்களும் இல்லாமல் வறுமையில் வாடுகிறோம். இதை அறிந்து எங்களுக்கு போனஸ் வழங்க உத்தரவிட்டிருந்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் பணம் முறையாக வழங்கப்படவில்லை' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். 

முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வுக்குள் உச்சகட்ட குழப்பங்கள் நிலவின. பன்னீர்செல்வத்தின் தர்மயுத்தம், இரட்டை இலை முடக்கம், ஆர்.கே.நகர் தேர்தல், மீண்டும் இரட்டை இலை கிடைத்தது எனப் பல்வேறு சவால்களை எதிர்கொண்டனர் அக்கட்சியின் நிர்வாகிகள். இந்தச் சண்டையில், `கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் யார் பக்கம் இருக்கின்றனர்?' என்ற குழப்பம் இன்றளவுக்கும் நீடிக்கிறது. கட்சியின் ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் பொறுப்பேற்ற பிறகு, கட்சியின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. தகுதிநீக்க வழக்கின் தீர்ப்புக்குப் பிறகு 20 தொகுதிகளின் தேர்தல் பணிகளுக்குப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்னும் சில வாரங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டால், கழகத்தின் 400 பேச்சாளர்களும் களமிறக்கப்பட உள்ளனர். இதை அறிந்து அவர்களின் குறைகளைத் தீர்க்கும் பணிகளில் ஆர்வம் காட்டி வருகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இதன் ஒருபகுதியாக பேச்சாளர்களுக்குத் தீபாவளி போனஸ் வழங்குமாறு உத்தரவிட்டிருந்தார். இந்தப் பணத்தை பட்டுவாடா செய்யும் பொறுப்பை அ.தி.மு.க இலக்கிய அணி மாநிலச் செயலாளரும் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவருமான பா.வளர்மதியிடம் ஒப்படைத்தனர்.                      

தலைமைக் கழகப் பேச்சாளர் ஒருவரிடம் பேசினோம். ``ஜெயலலிதா இருந்த வரையில் பேச்சாளர்களுக்குப் பொருளாதாரரீதியாக எந்தவிதச் சிரமங்களும் இருந்ததில்லை. மாவட்டங்களில் எதாவது ஒரு கூட்டம் நடைபெற்றுக் கொண்டே இருக்கும். பேச்சாளர்களும் உற்சாகமாக மாவட்டங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்தனர். அம்மா இறந்த பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக எங்களுக்கு எந்தவிதக் கூட்டங்களும் இல்லை. பொருளாதாரரீதியாகவும் கடும் பின்னடைவில் இருக்கிறோம். இதை அறிந்துதான் பேச்சாளர்களுக்குப் பெரும் தொகை ஒன்றை வழங்க உத்தரவிட்டிருந்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அமைச்சர் தங்கமணி மூலமாக இந்தப் பணிகள் நடைபெற்று வந்தன. கழகத்தில் இலக்கிய அணி மாநிலச் செயலாளராக இருப்பதால், வளர்மதி மூலமாக பணத்தை வழங்கவும் உத்தரவிட்டிருந்தார் முதல்வர். ஆனால், அவர் இந்தப் பணியைச் சரிவரக் கையாளவில்லை. வழக்கமாக, தலைமைக் கழகத்தில் வைத்துத்தான் பணத்தை விநியோகம் செய்வது வழக்கம். இந்த முறை கே.கே.நகரில் உள்ள வளர்மதி வீட்டில் வைத்தே பணத்தை விநியோகித்தனர். அதையும் அவர் வீட்டில் உள்ள உதவியாளர்கள்தான் கொடுத்தனர். தன்னுடைய கையால் வளர்மதி வழங்கவில்லை. இந்தப் பணம் முறையாகச் சென்று சேரவில்லை என்ற குமுறல் பேச்சாளர்கள் மத்தியில் உள்ளது. 

அ.தி.மு.க தலைமைக் கழகம்

நேற்று தலைமைக் கழகத்தைத் தொடர்பு கொண்ட சில பேச்சாளர்கள், `எங்களுக்கு இன்னும் பணம் வந்து சேரவில்லை' எனப் புலம்புகின்றனர். `தீபாவளியன்று வீட்டில் உள்ளவர்களோடு நல்லபடியாக பண்டிகையைக் கொண்டாடட்டும்' என்ற நல்ல நோக்கத்தில்தான் பணத்தைக் கொடுத்தனர். அதில் நட்சத்திரப் பேச்சாளர்களுக்குக் கூடுதலாகக் கொடுத்துவிட்டு, மற்றவர்களுக்கு மிகக் குறைவாகக் கொடுத்துவிட்டார் வளர்மதி. அதாவது, அவருக்கு ஆதரவாக இருப்பவர்களுக்கு அதிக தொகையும் மற்றவர்களுக்குப் பாரபட்சமாகவும் நிதி கொடுத்திருக்கிறார். இதனால், உண்மையான பேச்சாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். `எவ்வளவு தொகை கொடுக்க வேண்டும்?' என இந்த விவகாரத்தில் தலைமைக் கழகம் முடிவு செய்யவில்லை.

`ஒவ்வொரு பேச்சாளர்களுக்கும் நிறைவாக வாரிக் கொடுங்கள்' என்றுதான் தெரிவித்தது. பி, சி பிரிவு பேச்சாளர்களுக்குப் பத்தாயிரம் ரூபாய் எனவும் நட்சத்திரப் பேச்சாளர்களாக இருக்கும் நடிகர்களுக்குப் பெரிய தொகையையும் பிரித்துக் கொடுத்துவிட்டார். அவரது இந்தச் செயலால் பல்வேறு மாவட்டப் பேச்சாளர்கள் நொந்து போய்விட்டனர். பத்தாயிரம் ரூபாயைக் கொடுப்பதற்காக ஒருவரை திருநெல்வேலியிலிருந்து வரவழைப்பது மிகவும் கொடுமை. அவர் அங்கிருந்து வந்து செல்வதற்கே இரண்டாயிரம் ரூபாய் வரையில் வாகனச் செலவுக்குச் சென்றுவிட்டது. இதைக் கேள்விப்பட்டு கோபப்பட்டிருக்கிறார் முதல்வர். `அவர் ஒரு சீனியர். நல்லமுறையில் பணத்தை வழங்குவார் என எதிர்பார்த்தேன். இப்படிச் செய்துவிட்டாரே! நாமே நேரடியாகக் கொடுக்காமல் அவர் மூலமாகக் கொடுக்க வைத்ததற்குக் காரணம், பேச்சாளர்களுக்கு உரிய முறையில் கொடுப்பார் என நம்பியதுதானே' எனக் கடுகடுத்திருக்கிறார். மொத்தத்தில், இந்தத் தீபாவளியால் பேச்சாளர்கள் நொந்து போனதுதான் மிச்சம்" என்றார் வேதனையோடு. 

பேச்சாளர்களின் குமுறல் குறித்து பா.வளர்மதியிடம் விளக்கம் கேட்டோம். ``இதை உங்களிடம் யார் கூறியிருப்பார்கள் என்று எனக்குத் தெரியும். யார் புகார் சொன்னார்களோ அவர்களிடமே நீங்கள் கேளுங்கள். அரசியலில் புகார் சொல்வது எளிதானது. போகிற போக்கில் கூறிவிட்டுச் சென்றுவிடுவார்கள். பணம் பெற்றவர்கள் பட்டியல் என்னிடம் உள்ளது. நாற்பது ஆண்டுகளாக சென்னையில் இருக்கிறேன். இந்த மாதிரி என் மீது ஏதாவது புகார் வந்திருக்கிறதா? யாரோ எனக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறார்கள். ஏதாவது மோசடிப் புகார் என் மீது வந்திருக்கிறதா...சொல்லுங்கள்!" என்றதோடு முடித்துக் கொண்டார்.