வெளியிடப்பட்ட நேரம்: 16:10 (08/11/2018)

கடைசி தொடர்பு:16:10 (08/11/2018)

பசுமாட்டின் உயிரைப் பறித்த பிளாஸ்டிக்!- கரூர் நகராட்சி அலட்சியத்தால் நடந்த பரிதாபம்

பிளாஸ்டிக்குகளை வரும் ஜனவரி மாதத்திலிருந்து ஒழிக்க இருப்பதாக முன்கூட்டியே உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு. அந்த உத்தரவு அல்லது தடை அமலுக்கு வர இன்னும் ஒன்றரை மாத காலமே நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக்குகளை தின்று பலரது கண்களுக்கு முன்பே பசுமாடு ஒன்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பிளாஸ்டிக்குகளை தின்னும் பசுமாடுகள்

இன்று உலக மக்களை அச்சுறுத்தும் விஷயம் பிளாஸ்டிக்குகள்தாம். காற்றுபோல் நீக்கமற எங்கும் நிறைந்து மனிதர்களுக்கு எமனாக மாறும் வஸ்துவாக பிளாஸ்டிக் உருவெடுத்து வருகிறது. நிலத்தடி நீரை பாதிப்பது, அதை எரித்தால் அந்தப் புகையை சுவாசிக்கும் மனிதர்களுக்கு எண்ணற்ற நோய்கள் ஏற்படுவது என்று மனிதகுலத்துக்கு தீங்கு விளைவிக்கும் காரணிகளில் முதன்மையானதாகவும் பிளாஸ்டிக்குதான் மாறி கொண்டிருக்கிறது. `வினை விதைத்தவன் வினை அறுப்பான்' என்பதுபோல், மனிதர்களாகிய நாம் இதன் தீமை தெரிந்தே பயன்படுத்தி எங்கும் விசிறி எறிந்து குப்பை மேடுகளாக்கிவிட்டு, இப்போது பிளாஸ்டிக்கள் தரும் அவஸ்தைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

இதன் தீமையை உணர்ந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சில மாதங்களுக்கு முன்பு, `வரும் ஜனவரி 1, 2019 ல் இருந்து தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு 100 சதவிகிதம் தடை விதிக்கப்பட இருக்கிறது. அதற்கு தகுந்தாற்போல், வணிக நிறுவனங்களும் மக்களும் மாற்று வஸ்துகளின் பயன்பாட்டிற்கு மாறிவிடுவது உத்தமம்' என்று அறிக்கை விட்டார். அது அமலுக்கு வர இன்னும் ஒன்றரை மாத காலமே உள்ளது. இந்நிலையில்தான், கரூர் சின்னாண்டாங்கோயில் சாலையில் இருமங்கிலும் மலைபோல் குவிந்து கிடந்த பிளாஸ்டிக்குகளை தின்ற பசுமாடு ஒன்றும் பலரது கண் முன்னாலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பசுமாடு பிளாஸ்டிக் உண்பதை யதேச்சையாக யாரோ ஒருவர் போட்டோ எடுத்துள்ளார். அதன்பிறகு, மறுபடியும் அவருக்கு அந்த மாடு இறந்த தகவலும் கிடைத்துள்ளது. இரண்டு போட்டோக்களையும் வைத்து அவர் சமூக வலைதளங்களில் பதிவிட, ``பிளாஸ்டிக் எமனை உடனே அப்புறப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கணும்" என்று சமூக ஆர்வலர்கள் பொங்கி வருகிறார்கள்.

பிளாஸ்டிக் சாப்பிட்டு பலியான பசுமாடு

இதுபற்றி, நம்மிடம் பேசிய அந்தப் பகுதி இளைஞர்கள் சிலர், ``இந்தப் பகுதியில் இப்படி பிளாஸ்டிக்குகளை சாலையோரங்களில் மலைபோல் குவித்து வைத்தார்கள். தனியாரும், நகராட்சியுமே இதை முன்னின்று செய்தார்கள். இதை இங்கு திரியும் மாடுகள் தினமும் உண்பதை வாடிக்கையாக வைத்திருந்தன. அடிக்கடி இந்த பிளாஸ்டிக்குகள் எரிய ஆரம்பித்து, அதில் வரும் புகையை இந்த வழியாகப் போய் வரும் நாங்க நுகர்ந்து அவஸ்தைபடும் சூழல் ஏற்பட்டது. இதனால், `இந்த பிளாஸ்டிக் குப்பைகளை உடனே அப்புறப்படுத்துங்க'ன்னு பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் கொடுத்தோம். ஆனா, அவங்க எங்க புகாரை கண்டுக்கலை. அதனால், பரிதாபமாக அதைச் சாப்பிட்ட இந்தப் பசுமாடு உயிரை இழந்துட்டு. முதல்வர் வரும் ஜனவரி முதல் பிளாஸ்டிக்கை ஒழிக்க தடை போட்டதை 100 சதவிகிதம் உறுதியா நின்னு செயல்படுத்திக் காட்டணும். அதைவிட, ஏற்கெனவே தமிழகம் முழுக்க இப்படி லட்சம் லட்சமான டன் கணக்கில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற என்ன செய்ய போறாங்க என்பதை பத்திச் சொல்லலை. பிளாஸ்டிக் பயன்பாட்டை ஜீரோ சதவிகிதம் ஆக்கணும் இந்த அரசு" என்றார்கள்.