வெளியிடப்பட்ட நேரம்: 16:25 (08/11/2018)

கடைசி தொடர்பு:16:25 (08/11/2018)

`மதச்சார்பின்மைக்கு எடுத்துக்காட்டு சபரிமலை!'- காஞ்சியில் ரமேஷ் சென்னிதாலா பேட்டி

``சபரிமலைக்கு இளம்பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான வழக்கில் பக்தர்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வரும்'' எனக் கேரள மாநில காங்கிரஸ் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரமேஷ் சென்னிதாலா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ரமேஷ் சென்னிதாலா

காஞ்சிபுரம் கோயில்களை சுற்றிப் பார்ப்பதற்கு இரண்டு நாள் பயணமாக ரமேஷ் சென்னிதாலா வந்திருந்தார். அவரை வரவேற்கும் விதமாகக் காஞ்சிபுரம் முன்னாள் எம்.பி. விஸ்வநாதன் உடன் வந்திருந்தார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த ரமேஷ் சென்னிதாலா, ``சபரிமலையில் இளம் பெண்களை அனுமதிப்பது  குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு 99% சதவிகித மகளிரிடையே ஆதரவு பெறவில்லை. மறு சீராய்வு மனுக்களை உச்சநீதிமன்றம் பரிசீலிக்கும்போது, சபரிமலையின் தற்போதைய களநிலவரத்தைக் கணக்கில்கொண்டு தீர்ப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம். இதற்காக மூத்த வழக்கறிஞரும் காங்கிரஸ் தலைவருமான அபிஷேக் மனு சிங்வியை சபரிமலை வழக்கில் ஆஜராக கேரள காங்கிரஸ் நியமித்துள்ளது. மதசார்பின்மைக்கு எடுத்துக்காட்டாக சபரிமலை திகழ்கிறது.

அனைத்து சாதி மதத்தினரும் சபரிமலை ஐயப்பனைத் தரிசிக்க வருகிறார்கள். பா.ஜ.க., மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் அரசியல் ஆதாயத்துக்காக எடுத்துள்ள நிலைப்பாடுகளைக் காங்கிரஸ் கட்சி மக்களிடையே தெளிவுபடுத்த பாதயாத்திரைகளை ஏற்பாடு செய்துள்ளது. கேரளா மாநிலம் முழுவதும் இரண்டு வாகன யாத்திரைகளும், மூன்று பாதயாத்திரைகளும் நடத்தப்பட உள்ளது.   மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை அவர்கள் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் யாத்திரைகள் நடத்தி விளக்கங்களைக் கொடுத்து வருகிறார்கள். சபரிமலை விவகாரத்தைக் கையாளுவதில் கேரள அரசு முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது. கோடிக்கணக்கான பக்தர்கள் வரும் இடத்தில் அமைதியையும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாதவாறு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டிய து அவசியம். கேரள அரசு இதைச் செய்ய தவறிவிட்டதால் பக்தர்கள் மிகுந்த மன வருத்தத்திற்கு உள்ளாகி உள்ளனர். கேரள அரசின் நடவடிக்கைகளினால் சபரிமலை புனித யாத்திரையின் முக்கியத்துவம் குறைகிறது” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க