வெளியிடப்பட்ட நேரம்: 15:46 (08/11/2018)

கடைசி தொடர்பு:15:46 (08/11/2018)

"சர்காருக்கு மட்டுமல்ல, `பேட்ட' ரஜினிக்கும் இது பாடம்!" - கோட்டையில் கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி

`நானும் ஜெயலலிதாதான்' என்பதை நிரூபிப்பதற்கான சந்தர்ப்பம் இப்போது வந்திருக்கிறது. சர்கார் பட விஷயத்தில் நாம் தினகரனையும் கார்னர் செய்ய வேண்டும் எனப் பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

ர்கார் படத்துக்கு எதிராகக் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது அ.தி.மு.க. `நடிகர் விஜய்யும் தினகரனும் அம்மாவுக்கு எதிரானவர்கள் என்பதை வெளிக்காட்டும் வகையில் போராட்டம் நடத்துங்கள்' எனக் கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியிருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. 

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் சர்கார் திரைப்படம், இலவசங்களுக்கு எதிராகக் கடுமையான வசனங்களை முன்வைக்கிறது. குறிப்பாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விமர்சிக்கும் வகையிலான காட்சிகள் இருப்பதாகக் கூறி, அ.தி.மு.க நிர்வாகிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என நேற்று பேட்டியளித்திருந்தார் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு. இதுதொடர்பாக இன்று பேட்டியளித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், "அம்மா இல்லாததால் இவர்களுக்குக் குளிர்விட்டுப் போய்விட்டது. அம்மா இருக்கும்போது இதுபோல் ஏதாவது ஒரு படத்தில் கருத்து வந்ததுண்டா என்று யோசியுங்கள். அம்மா இருக்கும்போதே இப்படிப் படம் எடுத்திருந்தால் இவர்களின் வீரத்தை மெச்சி இருப்போம். அவரவர் கொள்கைகளைக் கூறி அந்தக் கருத்துகளைப் பிரதிபலிப்பதாக படம் இருந்தால் அது ஏற்றுக்கொள்ள வேண்டிய வி‌ஷயம். ஆனால், தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக பிறருடைய உணர்வுகளை மிதித்து அவர்களின் எண்ணங்களை சிதைத்து, மக்களின் உணர்வுகளை அழிக்கும் செயலை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது" எனக் கூறியிருந்தார். 

சர்காருக்கு எதிராகப் போராட்டம்

மதுரையில் இன்று பேட்டியளித்த அ.தி.மு.க எம்.எல்.ஏவும் மா.செவுமான ராஜன் செல்லப்பா, "குறுகிய நோக்கத்தோடு ஆளுங்கட்சியை இழிவுபடுத்துவதாக சர்கார் படம் அமைந்துள்ளது. எனவே, மதுரையில் இந்தத் திரைப்படத்தை திரையிடக் கூடாது. இந்தத் திரைப்படத்தின் காட்சிகளை மாற்றியமைக்கும் வரை படத்தை திரையிட அனுமதிக்கமாட்டோம். காட்சிகள் ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும். மதுரை விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் படத்தின் காட்சி மாற்றியமைக்கும் வரை படத்தை திரையிடக் கூடாது என்பதை வேண்டுகோளாக வைக்கிறோம். இல்லாவிட்டால், தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடைபெறும்" என எச்சரித்திருந்தார். இதையடுத்து, மதுரையில் சில தியேட்டர்களில் சர்கார் படத்தின் மாலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

இந்நிலையில், சர்கார் படக் காட்சிகள் குறித்து தலைமைச் செயலகத்தில் தீவிர ஆலோசனை நடந்துள்ளது. அப்போது கட்சி நிர்வாகிகளிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "சர்கார் படத்துக்கு எதிராகக் கடுமையாகப் போராட வேண்டும். `நானும் ஜெயலலிதாதான்' என்பதை நிரூபிப்பதற்கான சந்தர்ப்பம் இப்போது வந்திருக்கிறது. சர்கார் பட விஷயத்தில் நாம் தினகரனையும் கார்னர் செய்ய வேண்டும். 'அம்மாவுக்கு நாம்தான் உறுதியான விசுவாசிகள்' என்பதைக் காட்டுவதற்காகக் கிடைத்த வாய்ப்பு இது. சர்கார் மூலமாக இதைச் சாதித்துவிடுங்கள். சொல்லப் போனால், இந்த விஷயத்தில் வான்டட்டாக வந்து விஜய் சிக்கியிருக்கிறார். `தலைவா' படத்துக்கு அம்மா செய்ததுபோல `மெர்சல்' படத்துக்கு நாம் எதிராகச் செயல்படவில்லை. 

அப்போது பா.ஜ.க நிர்வாகிகள் நமக்கு நெருக்கடி கொடுத்தும் விஜய்க்கு இந்த அரசு நெருக்கடி தரவில்லை. ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து இப்போது நம்மையே கடிக்க வந்திருக்கிறார்கள். விஜய்யை எதிர்த்துப் போராடும்போது, நம்பக்கம் வந்து நின்று தினகரனும் போராட வேண்டும். இல்லாவிட்டால், இவர்கள் இருவரும் அம்மாவுக்கு எதிரானவர்கள் என்ற பிம்பம் ஏற்படும். இதை அரசியல் விவகாரமாக மாற்றுவோம். விஜய் ஒரு தனி மனிதர்தான். அவரை எந்தக் கட்சியும் சேர்த்துக் கொள்ளப் போவதில்லை. தினகரனும் அவரும் சேர்ந்தால் சேர்ந்து கொள்ளட்டும். இரண்டு பேருமே அம்மாவுக்கு எதிரிகள்தான் என்பதைக் காட்டுங்கள். அடுத்து வரப் போகும் `பேட்ட' ரஜினிக்கும் இது ஒரு பாடம்" எனக் கூறியிருக்கிறார்.