வெளியிடப்பட்ட நேரம்: 16:45 (08/11/2018)

கடைசி தொடர்பு:16:56 (08/11/2018)

`உதவ ஆள் இல்லை!' - ஹரிணியை நினைத்து சாப்பிடாமல் இருக்கும் கர்ப்பிணி தாய்!

காணாமல் போன ஹரிணி ஒன்றரை மாதங்கள் கடந்தும் கிடைக்காமல் போக, தீபாவளின்று நாள் முழுவதும் சாப்பிடாமல் ஹரிணியின் தாய் காளியம்மாள் அல்லாடிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. காளியம்மாள் மூன்று மாத குழந்தையை வயிற்றில் சுமப்பவர் என்பதால், அவரை மருத்துவமனையில் சேர்த்து மருத்துவப் பரிசோதனை செய்ய இருக்கிறார்கள்.

ஹரிணியின் பெற்றோர்

காஞ்சிபுரம் மாவட்டம், மானாமதி கிராமத்தைச் சேர்ந்த நாடோடி இன தம்பதியான வெங்கடேசன், காளியம்மாளின் இரண்டு வயது மகள்தான் ஹரிணி. ஒன்றரை மாதங்களுக்கு முன்பு பாசி மணிகள் விற்கப் போன அவர்கள் அணைக்கட்டு காவல்நிலையம் அருகே இரவில் படுத்து உறங்கினர். நடுராத்திரியில் ஹரிணி காணாமல் போக, பதறிப்போன அந்தத் தம்பதி, அணைக்கட்டு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். 'ஹரிணி கிடைக்கிற வரை இந்த இடத்தை விட்டுப் போகமாட்டோம்' என்று அங்கேயே தங்கி இருக்கிறார்கள். காளியம்மாள் கர்ப்பிணியாக உள்ளதால், அவர் உணவு சாப்பிடாமல் அல்லாடி வருவது வயிற்றில் உள்ள குழந்தையையும் பாதிக்கும் என்று வெங்கடேசன் பதறி வருகிறார். இந்த நிலையில், கரூரைச் சேர்ந்த 'இணைந்த கைகள்' என்ற சமூக அமைப்பு, 'ஹரிணியைக் கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு ஒரு லட்சம் பரிசு' என்று அறிவித்தனர். அதை சமூக வலைதளங்களில் பரப்புவதோடு, மாவட்டவாரியாக அதை நோட்டீஸாக அச்சடித்து விநியோகித்து வருகிறார்கள்.

ஹரிணிஇந்தத் தகவல்கள் அனைத்தையும் விகடன் இணையதளம்தான் தொடர்ந்து செய்தியாக பதிந்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டக் காவல்துறை நான்கு தனிப்படைகள் அமைத்து ஹரிணியைத் தேடி வருகிறது. இதற்கிடையில், ரஜினி ரசிகர்கள் வேறு சமூக வலைதளங்கள் மூலம் ஹரிணியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள். கோவையில் ராஜம் என்ற பெயரில் மூன்று பேருந்துகளை இயக்கும் பேருந்து டிரான்ஸ்போர்ட் முதலாளி அருண் என்பவர், ``ஹரிணியைக் கண்டுபிடித்து தருபவர்கள் எங்கள் பேருந்துகளில் 5 வருடங்கள் இலவசமாக பயணிக்கலாம்" என்று அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த நிலையில், ஹரிணி காணாமல் போன இந்த ஒன்றரை மாதங்களில் சரியாக சாப்பிடாமல் பரிதவித்து வருகிறார் காளியம்மாள். அவர் மூன்று மாத கர்ப்பிணி என்பதால், 'சாப்பிடாமல் இருப்பது ஆபத்தாச்சே' என்று அவரது கணவர் பதறி வருகிறார். இந்த நிலையில், கடந்த தீபாவளி அன்று நாள் முழுக்க சாப்பிடாமல் அடம் பிடித்திருக்கிறார். இதனால், அவரது உடல்நிலை மோசமாக, அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளிக்க முடிவு பண்ணி இருக்கிறது இணைந்த கைகள் அமைப்பு.

நம்மிடம் பேசிய அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சலீம், ``ஹரிணி காணாமல் போனதை சம்பந்தமே இல்லாத எங்களாலேயே ஜீரணிச்சுக்க முடியலை. பெத்த தாய் எப்படி தாங்கிகொள்வார். ஆனால், அவர் இன்னொரு குழந்தையை வயிற்றில் சுமந்திருக்கிறார் என்பதுதான் எல்லோரையும் பதற வைக்குது. சாப்பிடாமல் எந்நேரமும் அழுது அரற்றிக் கொண்டிருக்கிறாராம். உச்சகட்டமாக தீபாவளியன்று முழுவதும் சாப்பிடாமல் கண்ணீரும் கம்பலையுமாக இருந்திருக்கிறார். மூன்று மாதக் குழந்தை அவர் வயிற்றில் வளருது. இந்த நேரத்தில்தான் பெண்கள் நன்றாக சாப்பிடணும்; மனரீதியாக மகிழ்ச்சியாக இருக்கணும்ன்னு சொல்வாங்க. ஆனால், காளியம்மாள் அதற்கு நேர்மாறா இருப்பது அவரது வயிற்றில் வளரும் குழந்தைக்குதான் ஆபத்து.

வெங்கடேசன், காளியம்மாள் தம்பதிக்கு உதவ அங்க ஆள் இல்லை. போலீஸாரும் ஹரிணியைக் கண்டுபிடிக்க ஆரம்பத்தில் காட்டிய வேகத்தை இப்போது காட்டவில்லையாம். இதனால், காளியம்மாள் எப்போதும் அரற்றிகிட்டே இருக்கிறார். அதனால், இன்னும் இரண்டு நாள்களில் எங்க செலவில் காளியம்மாளுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய இருக்கிறோம். மனரீதியாக அவரை தைரியப்படுத்தவும் இருக்கிறோம். அதோடு, ஹரிணியைக் கண்டுபிடிக்க நாங்கள் எடுக்கும் பல்வேறு முயற்சிகளை இன்னும் அதிகப்படுத்தியுள்ளோம். இதைப் படிக்கும் ஒவ்வொருவரும் ஹரிணியை இழந்து தவிக்கும் காளியம்மாளின் வலியை உணர்ந்துகொண்டு சமூக வலைதளங்களில் இந்தத் தகவலை எட்டுத்திக்கும் பரப்ப வேண்டும்" என்றார்.