வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (08/11/2018)

கடைசி தொடர்பு:17:00 (08/11/2018)

42 ஆண்டுகளாக அழைப்பிதழ் சேகரிப்பு... உரியவர்களிடம் நினைவுப் பரிசாக வழங்கிய தம்பதி

விருத்தாசலத்தைச் சேர்ந்த தம்பதியர் 42 ஆண்டுகளாகத் தங்களுக்கு வந்த அழைப்பிதழ்களை சேகரித்து உரியவர்களிடம் அவற்றை வழங்கி நெகிழச் செய்துள்ளனர்.

அழைப்பிதழ் சேகரித்த தம்பதி

 

விருத்தாசலம் அருகே உள்ள மணவாளநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராஜசேகர் - மங்கையர்க்கரசி தம்பதி. ராஜசேகர் தமிழக அரசின் தேசிய யானைக்கால் நோய் தடுப்புத் திட்டத்தில் இளநிலை பூச்சியல் வல்லுநராகப் பணியாற்றி வருகிறார். இந்தத் தம்பதி தங்கள் வீட்டுக்கு வரும் திருமணம், மஞ்சள் நீராட்டு விழா போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு வரும் அழைப்பிதழ்களைச் சேகரிக்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. அதன்படி அந்தக் கிராமத்தில் உள்ள 500 வீடுகளிலிருந்து கடந்த 1976-ம் ஆண்டிலிருந்து தங்களுக்கு வரப்பெற்ற 750  அழைப்பிதழ்களைப் பத்திரமாகப் பாதுகாத்து, அவற்றை லேமினேஷன் செய்து மீண்டும் அந்தக் குடும்பத்தினருக்கு சமீபத்தில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் வழங்கியுள்ளனர்.

ராஜசேகர்

இது குறித்து ராஜசேகர் கூறுகையில், ``திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு எங்கள் கிராமத்தினர் கொடுக்கும் அழைப்பிதழ்களைச் சேகரிக்க வேண்டும் என்ற ஆசை எங்களுக்கு இருந்தது. அதன்படி கடந்த 1976-ம் ஆண்டு முதல் எங்கள் கிராமத்தினர் வழங்கிய அழைப்பிதழ்களை மட்டும் பத்திரமாகச் சேகரித்து வந்தேன். அதை மாதம், வருடம் வாரியாகப் பிரித்து, ஒரு நோட்டில் வரிசைப்படுத்தி எழுதி, பின்னர் பத்திரமாகக் கட்டி வைத்திருந்தேன். இதுவரை 750 அழைப்பிதழ்கள் சேகரித்துள்ளேன். இவற்றை லேமினேஷன் செய்து அவர்களிடம் மீண்டும் வழங்க முடிவு செய்தேன். அழைப்பிதழ்கள் லேமினேஷன் செய்வதற்கு ரூ.1.25 லட்சம் செலவு ஆகும் எனத் தெரியவந்தது. இதை என் மனைவி மங்கையர்க்கரசியிடம் தெரிவித்தேன். அவர் மகிழ்ச்சியுடன் இதற்கு ஒப்புக்கொண்டார். 
இதையடுத்து அனைத்து அழைப்பிதழ்களும் மேமினேஷன் செய்யப்பட்டது.

பின்னர், அழைப்பிதழ் வழங்கிய அனைவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சமீபத்தில் எங்கள் கிராமத்தில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் அவர்களை அழைத்து அங்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் மூலம் அவற்றை வழங்கினேன். இவற்றை வழங்கியது அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. அவர்களின் இந்த மகிழ்ச்சியே எங்களுக்குப் போதும்'' என்று கூறினார்.