வெளியிடப்பட்ட நேரம்: 17:50 (08/11/2018)

கடைசி தொடர்பு:19:06 (08/11/2018)

கமல்ஹாசன், கிருஷ்ணசாமியைக் கைது செய்யக்கோரி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார்!

நடிகர் கமல், தொடர்ந்து குறிப்பிட்ட சில சமூகத்தின் பெயர்களை தன் படங்களின் தலைப்பாக குறிப்பிட்டு வருவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடார் மக்கள் சக்தி அமைப்பினர் புகார் தெரிவித்துள்ளனர். 

கமல் - கிருஷ்ணசாமி

1993-ம் ஆண்டு நடிகர் சிவாஜி, கமல், நாசர், ரேவதி, கெளதமி நடிப்பில் வெளியான படம் தேவர் மகன். 25 வருடங்களுக்குப் பிறகு இந்தப் படத்தின் அடுத்த பாகத்தை படமாக்க இருப்பதாக சில தினங்களுக்கு முன்பு கமல் ஒரு பேட்டியில் அறிவித்திருந்தார். இது தொடர்பாக புதியதமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கமலுக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அதில் “ 'தேவர் மகன்' படத்தால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் தேவேந்திரகுல வேளாளர்கள். அந்த மோதலால் எண்ணற்ற தேவேந்திரகுல வேளாளர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். அதைச் சரிசெய்ய தேவேந்திரகுல வேளாளர்களுடைய பெருமையை விளக்கும் வகையில் நீங்கள் படம் ஒன்றை எடுக்க வேண்டும். அந்த வகையில், நீங்கள் இப்போது எடுக்கக்கூடிய படத்தை ’தேவேந்திரர் மகன்’ என்று பெயரிடுங்கள். இல்லையென்றால் இந்தப் படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சூழல் உருவாகும். அந்தப் படம் முடங்கும்” என்று அறிக்கை வெளியிட்டிருந்தார். 

இந்த நிலையில், கமலையும் கிருஷ்ணசாமியையும் கைது செய்ய வேண்டும் என நாடார் மக்கள் சக்தி அமைப்பினர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த மனுவில், ``கிருஷ்ணசாமி, கமல்ஹாசனுக்கு எழுதியிருந்த கடிதத்தில் தேவர் மகன்-2 என்ற படத்தின் பெயரை தேவேந்திரர் மகன்-2 என வைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். சாதியின் மோதல்களைத் தென் தமிழகத்தில் உருவாக்கும் உள்நோக்கத்தோடு தொடர்ந்து சாதிப் பெயரை படத்தின் பெயராக வைத்தும் சில சாதியினரை உயர்த்திக் காட்டி மற்றவர்களிடையே கலவரத்தைத் தூண்டும் நடிகர் கமல்ஹாசனையும், தேவேந்திரர் மகன் -2 என பெயரை வைக்கத் தூண்டும் கிருஷ்ண சாமியையும் கைது செய்ய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.