`சென்சார் போர்டு படத்தை சரியாகத் தணிக்கை செய்திருக்க வேண்டும்!’ - மத்திய அரசுக்கு தம்பிதுரை அட்வைஸ் | Thambidurai advise to central government's censor board

வெளியிடப்பட்ட நேரம்: 18:35 (08/11/2018)

கடைசி தொடர்பு:18:35 (08/11/2018)

`சென்சார் போர்டு படத்தை சரியாகத் தணிக்கை செய்திருக்க வேண்டும்!’ - மத்திய அரசுக்கு தம்பிதுரை அட்வைஸ்

``அ.தி.மு.க-வில் டி.டி.வி.தினகரனை இணைத்தால் அ.தி.மு.க வலிமை பெறும் என்பதில்லை, அ.தி.மு.க வலிமையாக இருக்கிறது’’ என்று மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கடவூர் ஊராட்சி ஒன்றியம் மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி, வரவனை ஊராட்சி, பண்ணப்பட்டி ஊராட்சி ஆகிய பகுதிகளில் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று வருகிறார். அவருடன் கிருஷ்ணராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ கீதா மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை,

``அவரவர் பார்வையில் அரசியலில் ஒரு பார்வை இருக்கும். `அ.தி.மு.க-வில் டி.டி.வி.தினகரனை இணைக்க வேண்டும்' என்பது தனியரசு எம்.எல்.ஏ-வின் தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம். ஆனால், தினகரனை சேர்த்துதான் அ.தி.மு.க வலிமை பெறும் என்கிற நிலைமை இல்லை. இப்போதே அ.தி.மு.க வலிமையாகத்தான் இருக்கிறது. எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க வெற்றி பெறும். அதற்கான பணிகளைத் தொடங்கிவிட்டோம். வருகிற ஞாயிற்றுக்கிழமை அரவக்குறிச்சியில் செயல்வீரர் கூட்டம் நடக்கிறது.

ஒரு திரைப்படம் எடுக்கும்போது பிறர் மனம் புண்படும்படியாக இருக்கக் கூடாது. சென்சார் போர்டு மத்திய அரசின் ஆளுகைக்கு உட்பட்டது. அவை சரியான முறையில் சென்சார் செய்து படத்தை திரையிட அனுமதிக்க வேண்டும்.

தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை கடந்த ஒரு வார காலமாகப் பல்வேறு கருத்துகளைப் பேசி வருகிறார். சென்சார் போர்டு சரியான முறையில் படத்தைப் பார்த்து தணிக்கை செய்திருக்க வேண்டும். அப்படிச் சரியான முறையில் செய்திருந்தால், இந்தப் பிரச்னை வந்திருக்காது. சில படங்கள் சென்சார் போர்டை மீறி வெளிவந்துவிடும். படத்தில் பிறர் மனது புண்படும்படியான காட்சிகள் இருந்தால், அதைச் சுட்டிக்காட்டும்போது அதன் பிறகு, அந்தப் படத்தின் தயாரிப்பாளர், டைரக்டர் சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்கியுள்ளனர். அதை ஏற்று சென்சார் போர்டு இந்தப் படத்தில் உள்ள சர்ச்சைக் காட்சிகளை சரிசெய்வது நல்லது என்பது எனது கருத்து" என்றார். தொடர்ந்து இன்று மாலை மக்களிடம் இருந்து மனுக்களைப் பெறுகிறார்.