வெளியிடப்பட்ட நேரம்: 18:55 (08/11/2018)

கடைசி தொடர்பு:18:55 (08/11/2018)

குறைந்துவரும் ஏரிகளின் நீர்மட்டம்! - சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

திருவள்ளூர் மாவட்டத்தில் பருவ மழை பொய்த்துவிட்டதாலும் ஆந்திராவிலிருந்து கிருஷ்ணா நதி நீரும் நிறுத்தப்பட்டதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துவிட்டது. இதனால் சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

ஏரி

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான பூண்டி, சோழவரம், புழல் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி ஆகியவை திருவள்ளூர் மாவட்டத்தில்தான் உள்ளன. இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாகப் பருவ மழை முற்றிலும் பொய்த்துவிட்ட நிலையில் இந்த ஆண்டும் பருவ மழை பெய்யவில்லை.  

இதனால் பூண்டி ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யாத காரணத்தால் ஏரியின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துவிட்டது. ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து ஆண்டுக்கு 6 டி.எம்.சி தண்ணீர் இரண்டு தவணைகளாகத் தமிழகத்துக்குத் திறந்துவிடப்பட வேண்டும். ஆனால், அ.தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து ஆந்திர அரசிடம் பேசி உரிய முறையில் தண்ணீரைப் பெற எந்தவித நடவடிக்கையும் தமிழக அரசு எடுக்கவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான 3 டி.எம்.சி தண்ணீரில் ஒரு டி.எம்.சி தண்ணீர்கூட ஆந்திராவிலிருந்து தமிழகம் வரவில்லை. கடந்த செப்டம்பர் 29-ம் தேதி கண்டலேறு அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் 70 கன அடி தமிழக எல்லையான ஜீரோ பாயின்ட் வந்து சேர்ந்தது. பின்னர், 31.10.2018 அன்று 10 கன அடியாகக் குறைந்து பூண்டி ஏரிக்கு வந்துகொண்டிருந்தது. அதுவும் கடந்த 1-ம் தேதி முதல் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இதனால் பூண்டி ஏரியிலிருந்து சென்னைக்கு அனுப்பப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டது.

3,231 மில்லியன் கன அடி நீர் கொள்ளளவைக் கொண்ட பூண்டி நீர்த்தேக்கத்தில் தற்போது 612 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. இங்கிருந்துதான் சோழவரம், புழல் ஏரிகளுக்குத் தண்ணீர் அனுப்பப்படும். இந்நிலையில் தற்போது பூண்டி ஏரியிலிருந்து லிங்க் கால்வாய் மூலம் 400 கன அடியும், பேபி கால்வாய் மூலம் 34 கன அடி என மொத்தம் 434 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. ஏரியின் மதகுகளை சரியாகப் பராமரிக்காத பொதுப்பணித் துறையின் மெத்தனப்போக்கால் பாதி நீர் வீணாக வெளியேறி வருகிறது.  பூண்டி ஏரியில் தண்ணீரின் அளவு  குறைந்துவிட்டதால் ஆடு, மாடுகள் மேயும் இடமாக மாறியுள்ளது. சோழவரம் ஏரி 881 மில்லியன் கன அடி நீர் கொள்ளளவு கொண்ட ஏரியில் தற்போது 22 மில்லியன் கன அடி நீர் மட்டுமே இருப்பில் உள்ளது. புழல் ஏரி எனப்படும் செங்குன்றம் ஏரி 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது.

இதில் தற்போது 882 மில்லியன் கன அடி தண்ணீரே இருப்பு உள்ளது. இந்த ஏரியிலிருந்து சென்னை குடி நீருக்கு 90 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரி 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது. ஆனால், தற்போது 209 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. ஏரிக்கு வரும் வரத்து கால்வாய்களை அரசு சரியாகத் தூர் வாரத காரணத்தால் மழைக் காலங்களில் ஏரிக்கு வர வேண்டிய தண்ணீர் வீணாகச் செல்கிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளிலும் நீரின் அளவு வேகமாகக் குறைந்து வருகிறது. சென்னைக்கு குடி நீர் வழங்கும் இந்த ஏரிகளில் குறைந்த அளவில் தண்ணீர் உள்ளதால் இந்த ஆண்டு சென்னைக்கு கடும் குடி நீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.