வெளியிடப்பட்ட நேரம்: 18:11 (08/11/2018)

கடைசி தொடர்பு:20:09 (08/11/2018)

சென்னை தியேட்டரில் `சர்கார்' பேனர்களைக் கிழித்தெறிந்த அ.தி.மு.க-வினர்!

சென்னை காசி தியேட்டர் முன்பு அ.தி.மு.க-வினர் போராட்டத்தில் ஈடுபட்டு பேனர்களை கிழித்தனர்.

சர்கார்

விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் தீபாவாளிக்கு வெளியாகி தற்போது திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் `சர்கார்' திரைப்படத்தால் தொடர்ந்து பல பிரச்னைகள் உருவாகி வருகிறது. சர்கார் திரைப்படத்தில் நடிகை வரலட்சுமி, ஜெயலலிதாவின் இயற்பெயரான கோமளவல்லி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அரசு வழங்கும் இலவசப் பொருள்களை எரிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனால் அ.தி.மு.க-வினர் சர்காருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

அ.தி.மு.க-வின் பல அமைச்சர்கள் சர்காருக்கு எதிராகக் குரல்கொடுத்து வருகின்றனர். சட்ட அமைச்சர் சி.வி சண்முகம், சர்கார் படக் குழுவினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். இன்று தமிழகத்தின் பல பகுதிகளில் சர்கார் திரைப்படம் வெளியிடப்படும் தியேட்டர்கள் முன்பு அ.தி.மு.க-வினர் போராட்டம் நடத்தி பேனர்களை கிழித்து வருகின்றனர். மதுரையில் மூன்று தியேட்டரில் மதிய காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

இதைத்தொடர்ந்து மாலை 5 மணியளவில் சென்னை காசி தியேட்டர் முன்பு நூற்றுக்கணக்கான அ.தி.மு.க-வினர் குவியத்தொடங்கினர். உடனடியாக அங்கு வந்த விஜய் ரசிகர்கள் அ.தி.மு.க-வினர் பேனர்களை கிழிக்கும் முன்பு தாங்களாகவே அவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே போலீஸாரும் தியேட்டர் முன்பு குவிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் சர்கார் காட்சிகள் ரத்து போன்ற எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. 

இதையடுத்து, சர்கார் படத்தில் சில காட்சிகளை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி காசி தியேட்டர் முன்பு அ.தி.மு.க-வினர் போராட்டம் நடத்தினர். போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து அ.தி.மு.க-வினரே சர்கார் பட பேனர்களைக் கிழித்தனர். இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு நிலவியது. இருதரப்பினரிடமும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

மேலும் சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் அனுமதியில்லாமல் வைக்கப்பட்டுள்ள சர்கார் பட பேனர்களை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.