வெளியிடப்பட்ட நேரம்: 19:16 (08/11/2018)

கடைசி தொடர்பு:19:30 (08/11/2018)

டாஸ்மாக் இலக்கு 320 கோடி ரூபாய்...வசூல் எவ்வளவு தெரியுமா? #Shock

அண்ணாவின் பெயரைச் சுமந்து நிற்கும் கட்சியான ஆளும் அ.தி.மு.க, தற்போது தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு இலக்கு நிர்ணயித்து மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருப்பதுதான் கொடிய அவலம்.

டாஸ்மாக் இலக்கு 320 கோடி ரூபாய்...வசூல் எவ்வளவு தெரியுமா? #Shock

மிழக முதல்வராக பேரறிஞர் அண்ணா இருந்தபோது, அவருடைய தலைமையில் மகாத்மா காந்தியின் உருவச்சிலை திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் சிலர், அண்ணாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினார்கள். அவர்களிடையே பேசிய அண்ணா, ``சிலையை நான் திறப்பதில் தவறு ஏதும் இல்லை. காந்தியின் உயிர்நாடிக் கொள்கையில் ஒன்றான மதுவிலக்கை காங்கிரஸ் ஆளும் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் முழுமையாக அமல்படுத்துபவர்கள் நாங்கள்தான்” என்றார். அப்படிப்பட்ட அண்ணாவின் பெயரைச் சுமந்து நிற்கும் கட்சியான ஆளும் அ.தி.மு.க, தற்போது தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு இலக்கு நிர்ணயித்து மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருப்பதுதான் கொடிய அவலம்.

ஒவ்வோர் ஆண்டும் தீபாவளிப் பண்டிகை முடிந்ததும், அதற்கு அடுத்த நாள் முக்கியச் செய்திகளில் இடம்பெறுவதாக மாறிவிட்டது, டாஸ்மாக் விற்பனைத் தொகை. தேர்தல் காலங்களில் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுடைய ஊழல் கணக்குகளை பெரிதாக வெளியிடுவதுபோல் மது விலக்கு தொடர்பான அறிவிப்பும் ஒவ்வொரு தேர்தலின் போதும், எல்லா அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் இடம்பெறத் தவறுவதில்லை. குறிப்பாக, கடந்த சில தேர்தல்களின்போது மதுவிலக்குக் கொள்கை கட்சிகளின் ஆதாரப் புள்ளியாகத் திகழ்கின்றன. கடந்த 2016-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின்போது, தி.மு.க, மக்கள் நலக்கூட்டணி, பா.ம.க உள்ளிட்ட எல்லாக் கட்சிகளும் `மது இல்லா தமிழகம்’, `ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து மதுவிலக்கு’ என்பன போன்ற அறிவிப்புகளையே வெளியிட்டிருந்தன. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மட்டும், `அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும்' என்று தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தார். என்றாலும், டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை செய்யப்படும் நேரம் மட்டுமே குறைக்கப்பட்டது. இதுவரை படிப்படியாக மதுவிலக்கு என்பது நடைமுறைப்படுத்தப்படாமல் தமிழகத்தில் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

டாஸ்மாக்

இந்தச் சூழ்நிலையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது, 320 கோடி ரூபாய் அளவுக்கு டாஸ்மாக் கடைகள் மூலம் மதுபானங்கள் விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், ஞாயிறு, திங்கள், செவ்வாய் (தீபாவளி) எனத் தொடர்ந்து வந்த நாள்களில் அரசு அறிவித்த இலக்கைவிடவும் இரு மடங்கு அதாவது 600 கோடி ரூபாய் அளவுக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. 2016-ல் அ.தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர் மதுபானக் கடைகளின் எண்ணிக்கை சற்றே குறைக்கப்பட்டது. அதேபோல் `2017 ஏப்ரல் 1-ம் தேதி முதல் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும்' என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதைத் தொடர்ந்து நெடுஞ்சாலைகளுக்கு அருகில் இருந்த 3,000-க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டன. ஆனால், சில கடைகள் நெடுஞ்சாலைகளிலிருந்து வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டன. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் அரசுக்குக் கிடைக்க வேண்டிய வருவாய் குறையும் என்பதால் தமிழக அரசு இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்தது. தவிர, ஒருசில பகுதிகளில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை, மாநில அரசின் கட்டுப்பாட்டில் வரும் சாதாரண சாலைகளாக மாற்றியும், டாஸ்மாக் கடைகளைக் காப்பாற்றியது அரசு.

இதற்கிடையே டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டாலும் மது ரகங்களின் விற்பனை என்னவோ குறைந்தபாடில்லை. தமிழகத்தின் 2018-2019-ம் நிதியாண்டுக்கான மொத்த வருமானம் 1,76,251 கோடி ரூபாயாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையில் ஒவ்வோர் ஆண்டும் 22,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை டாஸ்மாக் மூலமாகப் பெறப்பட்டு வருகிறது. தமிழக அரசின் நிதி ஆதாரம் டாஸ்மாக் கடைகளையே நம்பியுள்ளது எனக் கூறப்படுகிறது. இந்திய அளவில் ஒப்பிடுகையில் மற்ற மாநிலங்களின் பட்ஜெட்டை விடவும் தமிழக அரசின் பட்ஜெட்டில் அதிகளவு தொகை இடம்பெற்றுள்ளது.

அரசின் வருவாயைப் பெருக்க, அரசு நிர்வாகத்தில் நடக்கும் முறைகேடுகளைச் சரி செய்வதன் மூலம் இழப்புகளைத் தடுத்து, சீர் செய்யலாம். தமிழகம் முழுவதும் ஆறரை கோடிக்கும் அதிகமாக மக்கள் தொகை உள்ள நிலையில், ஒரு கோடிக்கும் அதிகமானோர் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளனர் என்பது வருந்தத்தக்கது. இதனால், தமிழகத்தின் நிதி ஆதாரம் டாஸ்மாக் கடைகளில் விற்பனை மூலம் கிடைக்கிறது. குடிப்பழக்கத்தால் புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்கள் உருவாகும்போது, அதுபோன்ற நோய்களைக் குணப்படுத்துவதில் அரசு கவனம் செலுத்தும். இதன்மூலம் தமிழக அரசின் செலவுக் கணக்கு அதிகரிக்கும். எனவே, மதுவால் அரசுக்கு ஒருபுறம் வருவாய் கிடைத்தாலும், மற்றொருபுறம் மறைமுகமாகச் செலவினமும் ஏற்படுவதைத் தடுப்பதற்கில்லை.

அண்ணாவுக்குப் பிறகு முதல்வரான கருணாநிதி ஆட்சிக்காலத்தில்தான் தமிழகத்தில் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டது. அதற்குக் கருணாநிதி, ``சுற்றிலும் தீ எரிந்து கொண்டிருக்கையில் நடுவில் உள்ள கற்பூரமும் சேர்ந்துதான் எரியும்” என்று தெரிவித்து, மதுவிலக்கு ரத்துக்கான காரணத்தை விளக்கினார். கருணாநிதிக்குப் பின் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என அரசுகள் மாறிக் கொண்டிருந்தாலும் மது விற்பனை ஓரிரு ஆண்டுகள் தவிர்த்து, தமிழகத்தில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அரசுகள் செய்த சிறுசிறு சமரசங்களால், மாநிலத்தில் இன்றைக்குப் பெரும்பாலான இளைஞர்கள் மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளனர். 

டாஸ்மாக் அரசுடைமை - ஜெயலலிதா

கடந்த 2002-03-ம் ஆண்டில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, மதுபானங்கள் விற்பனையை அரசுடைமையாக்கி, தனியார் சம்பாதித்துக் கொண்டிருந்த கோடிக்கணக்கான பணத்தை அரசின் வருவாயாகத் திருப்பினார். மது விற்பனையை அரசுடைமை ஆக்கிய பின்னர், மதுப் பழக்கத்துக்கு உள்ளானோர் எண்ணிக்கை பெருமளவு உயர்ந்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. 

இதுகுறித்து எழுத்தாளர் புனிதப்பாண்டியனிடம் பேசினோம். ``பாடப் புத்தகங்களில் எப்படித் தீண்டாமை ஒழிந்து விட்டது என்று எழுதப்பட்டுள்ளதோ, அதேபோலத்தான், தமிழகத்தில் மது ஒழிப்பு நடவடிக்கையும் உள்ளது. எல்லாக் கட்சிகளும் மதுவுக்கு எதிரான நிலைப்பாட்டில்தான் உள்ளோம் என்று சொல்லிக்கொண்டாலும்கூட, டாஸ்மாக் விற்பனை மூலம் கிடைக்கும் வருவாயை விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை. டாஸ்மாக்கை தொடர்ந்து நடத்துவதற்குக் காரணமாக, அரசு சொல்வது வருமான இழப்பு ஏற்படும் என்பதுதான். அரசின் கட்டுப்பாட்டில் உள்ள எல்லாப் பொதுத்துறை நிறுவனங்களையும் டாஸ்மாக்கைப் போல் நடத்தினால் நிச்சயம் போதிய வருமானத்தை ஈட்ட முடியும். இந்தச் சிக்கலைத் தீர்க்க உடனடியாக முடிவெடுக்க முடியாது. ஆனால், மது ஒழிப்பைப் படிப்படியாகக் கொண்டுவர முடியும். இனிமேலாவது மது விலக்கை அமல்படுத்தத் தேவையான நடைமுறைகளை ஆட்சியாளர்கள் எடுக்க முன்வரவேண்டும். பண்டிகைக் காலங்களில் மது பாட்டில்கள் விற்பனை குறிப்பிடத்தக்க அளவு உயர்கிறது. திரையரங்குகளில் அதிகக் கட்டணம் கொடுத்து, சினிமா பார்ப்போர் அதிகரித்துள்ளதால், சினிமா டிக்கெட்டுகளின் விற்பனையும் உயர்ந்து, கட்டணங்கள் தாறுமாறாக எகிறிவிட்டன. இதுபோன்ற செயல்பாடுகளைத் தடுக்கத் தேவையான தீர்வுகள் எல்லாம், அரசு எடுக்கும் நடவடிக்கைகளைப் பொறுத்தே அமையும்” என்றார்.


டிரெண்டிங் @ விகடன்