வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (08/11/2018)

கடைசி தொடர்பு:20:20 (08/11/2018)

மதுரையில் எய்ம்ஸ் எப்போது அமையும்? - மத்திய அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்த மத்திய சுகாதாரத்துறை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்றம்

மதுரை தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் அமையும் என்ற அதிகாரபூர்வ தகவல் தென்மாவட்ட பொதுமக்களிடம் பெறும் வரவேற்பை பெற்றது. ஆனால், தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பதில்களில் எய்ம்ஸ் அமைவதற்காக எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்ற தகவல் கிடைத்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். ஆனால், அதை தமிழக சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் முற்றிலுமாக மறுத்து விரைவில் எய்ம்ஸ் அமைக்க ஏற்பாடுகள் நடைபெறும் என தெரிவித்தார்.

இந்த நிலையில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ரமேஷ் என்பவர் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், ``தமிழகத்தோடு அறிவிக்கப்பட்ட பிற மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. எனவே, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகளைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுவிடக்கூடாது. அதனால் மதுரை மாவட்டம் தோப்பூரில் தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ளது என மத்திய அரசு அரசிதழில் வெளியிட வேண்டும். மத்திய அரசு அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி ஒப்புதல் பெற வேண்டும். கட்டுமானப் பணிகளுக்காக ஒப்பந்தத்தை விரைவுபடுத்த வேண்டும். எய்ம்ஸ் மருத்துவமனைக்குத் தேவையான நிதியை ஒதுக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என அறிவிக்கப்பட்ட பின்னர், அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய சுகாதாரத்துறைச் செயலருக்கு உத்தரவிட்டனர். மேலும், எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப்பணிகள் எப்போது தொடங்கும், எவ்வளவு காலத்தில் நிறைவடையும் என்பது குறித்தும் அறிக்கையில் தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.