`நானும் விஜய் ரசிகன்தான், ஆனால்...' - கோவையில் கொந்தளித்த அ.தி.மு.க பிரமுகர் | Admk protest against Sarkaar film in Coimbatore

வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (08/11/2018)

கடைசி தொடர்பு:18:40 (08/11/2018)

`நானும் விஜய் ரசிகன்தான், ஆனால்...' - கோவையில் கொந்தளித்த அ.தி.மு.க பிரமுகர்

கோவையில் `சர்கார்' படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.க-வினர் விஜய்யின் பேனர், போஸ்டர்களை கிழித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அ.தி.மு.க போராட்டம்

விஜய் படம் என்றாலே பிரச்னைகளுக்கு பஞ்சம் இருக்காது. ஆனால், `சர்கார்' படம், ஃபர்ஸ்ட் லுக் வெளியானதில் இருந்து, அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. இந்த நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் அ.தி.மு.க அரசை மறைமுகமாக தாக்குவதாக அடுத்த சர்ச்சையில் சிக்கியிருக்கிறது சர்கார். குறிப்பாக, இலவச மிக்ஸி, மின்விசிறி போன்றவற்றை எரிப்பது போன்ற காட்சிகள் சர்கார் படத்தில் இடம்பெற்றுள்ளன. இதற்கு, அ.தி.மு.க-வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சர்கார் படத்தைத் தடை செய்ய வேண்டும், இயக்குநர் முருகதாஸை கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை சாந்தி தியேட்டர் அருகே, அ.தி.மு.க-வினர் ஊர்வலமாக வந்தனர். பிறகு, தியேட்டர் முன்பு வைக்கப்பட்டிருந்த பேனர்களை கிழித்தெறிந்து, கண்டனக் கோஷங்களை எழுப்பினர்.

அ.தி.மு.க போராட்டம்

இதுகுறித்து, அ.தி.மு.க-வின் கோவை தகவல் மொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ அம்மன் அர்ச்சுணன் மகனுமான கோபாலகிருஷ்ணன்,  ``படத்தில் காட்டப்பட்ட காட்சிகள் ஒரு தலைபட்சமாக உள்ளன.  தி.மு.க ஆட்சியில் இலவச தொலைக்காட்சிகள் கொடுக்கப்பட்டன. அதன் மூலம், ஒவ்வொரு வீட்டில் இருந்தும் தலா ரூ.150, கலாநிதி மாறனுக்கு சென்றது. மேலும், அப்போது மின்வெட்டு அதிகமாக இருந்தது. இதையெல்லாம் ஏன் படத்தில் சொல்லவில்லை. அம்மா ஆட்சியில் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் லேப்டாப், மிக்ஸி, கிரைண்டர் கொடுக்கப்பட்டது. மக்களிடம் தவறான தகவலைச் சொல்லி,  உண்மையை மறைக்கப் பார்க்கின்றனர். அம்மா இருந்தபோது ஏன் இப்படி ஒரு படத்தை எடுக்கவில்லை?’’ என்று பேசிக்கொண்டிருந்தவர் திடீரென்று டாப் கியருக்கு சென்று, ``கொடநாட்டில் பிச்சைக்காரன் மாதிரி நின்ன... நானும் விஜய் ரசிகன்தான். ஆனால், நாங்க எல்லாம் அம்மாவுக்கும், அ.தி.மு.க-வுக்கும் கட்டுப்பட்டவங்க. அவர்களை விமர்சிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது" என்றார் ஆவேசமாக.

அ.தி.மு.க போராட்டம்

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, துணை ஆணையர், உதவி ஆணையர் மற்றும் காவல் ஆய்வாளர் இருந்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து, மிக்ஸி, மின் விசிறி போன்ற பொருள்களை உடைக்கும் காட்சிகளையும், ஜெயலலிதாவை சித்திரிப்பது போல கோமளவள்ளி என்ற கதாபாத்திரம் வரும் காட்சிகளை நீக்கி, முருகதாஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், அ.தி.மு.க.-வினர் மனு அளித்தனர். இதனிடையே, அ.தி.மு.க.-வினர் சென்ற சிறிது நேரத்தில் விஜய் ரசிகர்கள் சிலரும் சாந்தி திரையரங்குக்கு வந்தனர். சர்கார் படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வந்ததாகவும், அ.தி.மு.க.-வினரின் போராட்டம் தொடர்பாக மேலிடத்துக்கு தகவல் சொல்லியுள்ளோம் என்றும், மேலிடத்தின் அறிவுறுத்தல்படி நடப்போம் என்றும் விஜய் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.