வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (08/11/2018)

கடைசி தொடர்பு:22:30 (08/11/2018)

`பேனர் பஞ்சாயத்து!’ - சாலைமறியலில் ஈடுபட்ட தங்க தமிழ்ச்செல்வன்

தேனி மாவட்டத்தில், பேனர் வைப்பதில் தங்க தமிழ்ச்செல்வனுக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்படுவதுண்டு. இந்த நிலையில், அ.ம.மு.க சார்பில் நாளை மறுநாள் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சி தொடர்பான பேனர் வைப்பதில் அ.தி.மு.க வினருடன் பிரச்னை ஏற்பட்டதைத் தொடர்ந்து, தங்க தமிழச்செல்வன் சாலை மறியலில் ஈடுபட்டார்.

சாலைமறியலில் ஈடுபட்ட தங்க தமிழ்ச்செல்வன்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 தொகுதிகளிலும் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்றும், அ.தி.மு.க அரசைக் கண்டித்தும் நாளை மறுநாள் (10.11.2018) டி.டி.வி.தினகரன் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது. இந்த நிலையில், அ.தி.மு.க சார்பாக வரும் 11-ம் தேதி மூன்று அமைச்சர்கள் கலந்து கொள்ள இருக்கும் இடைத்தேர்தல் ஊழியர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இரு கட்சிகளின் சார்பில் நடக்கும் நிகழ்வுகள் அடங்கிய  பேனர்களை ஆண்டிபட்டியில்  வைப்பதில் இரு தரப்பினருக்கும் லேசான மோதல்கள் இருந்து வந்தது. இந்த நிலையில்  அ.ம.மு.க சார்பாக அனுமதி பெற்று ஆண்டிபட்டி நகரில் பேனர் வைக்கப்பட்டது.

சாலைமறியலில் ஈடுபட்ட தங்க தமிழ்ச்செல்வன்

அதைத்தொடர்ந்து, அ.தி.மு.க-வினர் அனுமதி வாங்கிக்கொண்டு, அ.ம.மு.க பேனர்களுக்கு அருகிலேயே அவர்களின் பேனர்களை வைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த அ.ம.மு.க வைச் சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன், ஆண்டிபட்டி தேவர் சிலை அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். அவரது ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டார் அவருடன் சேர்ந்து சாலையில் அமர்ந்ததால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், தங்க தமிழ்ச்செல்வனை சமாதானம் செய்தனர். இன்று இரவுக்குள் அ.தி.மு.க பேனர்களை அகற்றி விடுவதாக உறுதியளித்தனர். பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய தங்க தமிழ்ச்செல்வன், ``அ.தி.மு.க பேனர் அகற்றப்படாவிட்டால், நாளையே ஆண்டிபட்டியில் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கும்!" என்றார். இச்சம்பவத்தால் ஒரு மணி நேரம், மதுரை - கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.