வெளியிடப்பட்ட நேரம்: 21:46 (08/11/2018)

கடைசி தொடர்பு:21:46 (08/11/2018)

களமிறக்கப்பட்ட கும்கிகள் - கோவை காட்டு யானைகளைப் பிடிக்க வனத்துறை தீவிரம்!

கோவையில் காட்டு யானைகளைப் பிடிக்கும் வனத்துறையின் முயற்சிக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

கோவையில் காட்டு யானைகளைப் பிடிக்கும் வனத்துறையின் முயற்சிக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

காட்டு யானை சின்னத்தம்பி

கோவை மாவட்டத்தில் தடாகம், மாங்கரை, சின்ன தடாகம், ஆனைக்கட்டி போன்ற பகுதிகள் வனத்துறையை ஒட்டியுள்ளன. இந்தப் பகுதிகளில் சமீப காலத்தில் மக்கள் குடியேறுவதும், விவசாயமும் ஆங்காங்கே அதிகரித்து வருகிறது. இதனால், தங்களின் முன்னோர் பாதைகளில் வரும் காட்டு யானைகள் கடும் பிரச்னைகளைச் சந்தித்து வருகின்றன. கட்டடங்களும், வயல் வெளிகளும் யானைகளுக்கு  அதிர்ச்சியை அளித்தாலும், உணவு தேடிச் செல்ல அதற்கு வேறு இடங்கள் இல்லை.

அப்படி உணவு தேடி வரும் யானைகள், தங்களின் விளை நிலங்களையும், வீடுகளையும் சேதப்படுத்துவதாக அந்தப் பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். குறிப்பாக சின்னதம்பி மற்றும் விநாயகன் என்றழைக்கப்படும் இரண்டு காட்டு யானைகளால் தங்களுக்கு அதிகம் பாதிப்பு ஏற்படுவதாகவும், இதனால், அந்த யானைகளை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்றும் அந்தப் பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ஆனால், அந்தப் பகுதியைச் சேர்ந்த பெரும்பாலான பழங்குடி மக்கள், யானைகளை வேறு இடத்துக்கு மாற்றக் கூடாது. இது, அவற்றின் இடம் என்று கூறிவருகின்றனர். இதைத்தொடர்ந்து, யானைகளை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு வனத்துறை தீவிரமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முக்கியமாக, முதுமலையிலிருந்து விஜய் மற்றும் பொம்மன் என்ற இரண்டு கும்கி யானைகள் இதற்காக கோவைக்கு அழைத்து வரப்பட்டுள்ளன. இதனால், எப்போது வேண்டுமானாலும் அந்த இரண்டு யானைகளையும் பிடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

கும்கி யானைகள்

கும்கி யானைகள்

``அந்த இரண்டு யானைகளும் மிகவும் அமைதியானவை. நேரில் வந்தால் கூட மனிதர்களை தாக்காது. ஆனால், சமீப காலமாக அந்த யானைகளுக்குத் தொடர்ந்து நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது. இது வனத்தின் அருகே இருக்கும் பகுதி. இந்த யானைகளை வேறு இடத்துக்கு மாற்றினால் மட்டும் பிரச்னை தீர்ந்துவிடுமா. அங்கு தொடர்ந்து யானைகள் வரத்தான் செய்யும். எனவே, மனிதர்களுக்குத்தான் அங்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். ஏற்கெனவே, காட்டு யானைகளைப் பிடிக்கும் பல முயற்சி ஆபத்தில் முடிந்துள்ளது என்பதை மறக்கக் கூடாது” என்று எச்சரிக்கின்றனர் சூழல் ஆர்வலர்கள்.

மேலும், சின்னதம்பி மற்றும் விநாயகன் யானைகளைப் காப்பாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி அந்தப் பகுதி மக்கள் #SaveChinnathambi #SaveVinayagan சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷிடம் கேட்டபோது, ``அந்த இரண்டு யானைகளால் அந்தப் பகுதியில் பல்வேறு பிரச்னைகள் இருக்கின்றன. கும்கி யானைகளை சாடிவயல் முகாமில் தங்க வைத்துள்ளோம். இதில், அடுத்தகட்டமாக என்ன செய்யப் போகிறோம் என்பதை விரைவில் சொல்கிறோம்” என்றார்.