வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (08/11/2018)

கடைசி தொடர்பு:23:00 (08/11/2018)

சிசிடிவி காட்சி உதவியுடன் ஏ.டி.எம் கொள்ளையனை ஒரு மணி நேரத்தில் கைது செய்த போலீஸார்!

போடி நகரத்தில் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்துக் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபரை கண்காணிப்பு கேமரா உதவியுடன் ஒரு மணி நேரத்தில் போலீஸார் பிடித்தனர்.

சிசிடிவி காட்சி

தேனி மாவட்டம் போடி சுப்பன்செட்டி தெருவில் உள்ள ஸ்டேட் பாங்க் ஏ.டி.எம் இயந்திரம் உடைந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு இன்று காலை தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போடி நகர போலீஸார், கைரேகை உள்ளிட்ட தடயங்களைச் சேகரித்தனர். பின்னர் ஸ்டேட் பாங்க் அலுவலர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர், பணம் நிரப்பும் ஊழியர்கள் உடைக்கப்பட்ட இயந்திரத்தை சோதனை செய்ததில், இயந்திரத்தில் பணம் இருக்கும் பெட்டகம் மட்டும் உடைக்காமல் இருந்தது தெரியவந்தது. இதனால் ஏ.டி.எம் இயந்திரத்தில் இருந்த ரூ.25 லட்சம் பணம் தப்பியது.

மகேஸ் கண்ணன்

அதைத்தொடர்ந்து ஏ.டி.எம் மையத்தில் பொருத்தப்பட்ட கண்காணிப்புக் கேமராவை சோதனை செய்தனர். அதில் மொட்டைத் தலையுடன் மர்ம நபர் ஒருவர் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைப்பது பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் போடி நகர காவல்துறையினர் விசாரணை செய்ததில் ஏ.டி.எம் இயந்திரத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது, போடி சூர்யா நகரைச் சேர்ந்த மகேஸ்கண்ணன் (32) என்பது தெரியவந்தது. பின்னர், போடி நகரம் முழுவதும் தொடர்ந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டு, மகேஸ்கண்ணனை போலீஸார் தீவிரமாகத் தேடிவந்தனர். இறுதியாக போடி பேருந்து நிலையத்தில் மகேஸ் கண்ணன் இருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து உடனடியாக அவரை கைது செய்தனர். மகேஸ்கண்ணன், ஏற்கெனவே இருசக்கர வாகனத்திருட்டு உள்ளிட்ட பல்வேறு திருட்டு வழக்குகளில் கைது செய்யப்பட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. ஏ.டி.எம் கொள்ளை முயற்சியில் கண்காணிப்புக் கேமரா ஆதாரங்கள் கிடைத்த ஒரு மணி நேரத்திலேயே விரைவாக செயல்பட்டு, குற்றவாளியை கைது செய்த போடி நகர காவல்துறையினரைப் பொதுமக்கள் பாராட்டினர்.