வெளியிடப்பட்ட நேரம்: 22:08 (08/11/2018)

கடைசி தொடர்பு:22:08 (08/11/2018)

`அமைச்சர்கள் மிரட்டல்?’ - வேலூரில் `சர்கார்’ காட்சிகள் ரத்து; தியேட்டர்களுக்குப் போலீஸ் பாதுகாப்பு!

வேலூர் மாவட்டத்தில் ‘சர்கார்’ படம் ஓடிய தியேட்டர்களின் உரிமையாளர்களுக்கு அமைச்சர்கள் தரப்பிலிருந்து மிரட்டல்கள் வந்ததால் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

‘சர்கார்’

விஜய்யின் ‘சர்கார்’ படம் ஆளும்கட்சியைச் சீண்டியுள்ளது. கொதித்தெழுந்த அ.தி.மு.க-வினர் ‘சர்கார்’ படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்கள் முன்பு ரகளையில் ஈடுபட்டு வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் 33 தியேட்டர்களில் ‘சர்கார்’ படம் வெளியானது. இன்று காலை முதலே, தியேட்டர்கள் முன்பு வைக்கப்பட்டிருந்த விஜய்யின் பேனர்களை அ.தி.மு.க-வினர் கிழித்து வீசினர். தட்டிக்கேட்ட ரசிகர்களையும் அவர்கள் மிரட்டினர். இதனால், பதற்றம் அதிகரித்தது. காட்சிகள் திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. அதன்பின், ‘சர்கார்’ படம் ஓடிய அனைத்து தியேட்டர்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஆனால், ரகளையில் ஈடுபட்ட அ.தி.மு.க-வினரை போலீஸார் தடுக்காமல் வேடிக்கை பார்த்தனர். 

மேலும், இம்மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர் கபில் தரப்பிலிருந்து ‘சர்கார் படத்தைத் திரையிடக் கூடாது’ என்று தியேட்டர்களின் உரிமையாளர்களுக்கு மிரட்டல்கள் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, மாவட்டத்தில் உள்ள பல தியேட்டர்களின் உரிமையாளர்கள் ‘நமக்கு ஏன் வம்பு’ என்று அச்சப்பட்டு மாலை காட்சிகளை ரத்து செய்துள்ளனர். திருப்பத்தூரில் உள்ள 7 தியேட்டர்களிலும் சர்கார் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்தத் தியேட்டர்கள் முன்பிருந்த விஜய்யின் பேனர்கள் அகற்றப்பட்டன. 
இதனால், தியேட்டர்களுக்குப் படம் பார்க்க வந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். அ.தி.மு.க-வினர் அராஜகத்தில் ஈடுபடுவதாகக் கூறி, அவர்களைக் கண்டித்து விஜய் மக்கள் இயக்கத்தினர் போராட்டம் நடத்த ஆயத்தமாகி வருகின்றனர்.