வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (08/11/2018)

கடைசி தொடர்பு:23:30 (08/11/2018)

`சினிமா ஷூட்டிங்குக்காக உருவாக்கப்பட்ட புத்தர் சிலை’ - திடீர் சுற்றுலாத்தலமான கிராமம்

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள கீழத்தோட்டம் கிராமத்தில் சினிமா ஷூட்டிங்குக்காக உருவாக்கப்பட்ட புத்தர் சிலையை பார்க்க, சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் இங்கு வந்து செல்கிறார்கள். இதனால் இக்கிராமம் திடீர் சுற்றுலாத் தலமாக மாறி வருகிறது.

புத்தர் சிலை

கீழத்தோட்டம் கிராமத்தில், காட்டாறு கடலுடன் கலக்கக்கூடிய கழிமுகம் அமைந்துள்ளது. அழகிய மணல் திட்டுகளோடும், அடர்ந்த மரங்களோடும் காட்சி அளிக்கும் இந்த கழிமுகத்தில், சினிமா ஷூட்டிங்குக்காக, கடந்த சில நாள்களுக்கு முன்பு 20 அடி உயரத்தில் மிகவும் பிரமாண்டமான புத்தர் சிலை ஒன்று அமைக்கப்பட்டது. கற்சிலை போல் தத்ரூபமாக காட்சி அளிக்கும் இந்தச் சிலையானது, பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. சிமென்ட், நார், மண், அட்டை உள்ளிட்டவைகள் பயன்படுத்தி அமைக்கப்பட்டுள்ள இந்தச் சிலையின் ஒட்டுமொத்த உயரத்தில் 8 அடி மட்டுமே தண்ணீருக்கு வெளியே உள்ளது. மீதமுள்ள 12 அடி தண்ணீருக்குள் அமைந்துள்ளது. இதுமட்டுமல்லாமல், கடந்த சில நாள்களாக மழையிலும் நனைந்துள்ளது இந்தச் சிலை. ஆனாலும் சிலை பெரிய அளவில் பாதிப்பும் ஏற்படாமல் இருப்பது, இப்பகுதி மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் தண்ணீருக்குள் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பிரமாண்ட புத்தர் சிலை, இப்பகுதி மக்களை வெகுவாக ஈர்த்து வருகிறது. இதனால் ராஜாமடம், அதிராம்பட்டினம், மாளியக்காடு, மகிழக்கோட்டை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராளமான மக்கள் இங்கு குவிகிறார்கள். புத்தர் சிலையால் அந்தப் பகுதி திடீர் சுற்றுலாத்தலமாக மாறியிருக்கிறது.