ஏ.ஆர்.முருகதாஸ் கைதா? - நள்ளிரவில் போலீஸ் ஏற்படுத்திய பரபரப்பு | Police reach Director A.R.Murugadoss residence to arrest him

வெளியிடப்பட்ட நேரம்: 23:57 (08/11/2018)

கடைசி தொடர்பு:00:04 (09/11/2018)

ஏ.ஆர்.முருகதாஸ் கைதா? - நள்ளிரவில் போலீஸ் ஏற்படுத்திய பரபரப்பு

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய அவரது வீட்டிற்கு காவல்துறை விரைந்துள்ளது என சன் பிக்சர்ஸ் நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது.

விஜய் நடிப்பில், ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளியன்று 'சர்கார் ' திரைப்படம்' வெளியானது. படம் வெளியாவதற்கு முன்பே கதை தொடர்பாகப் பல சர்ச்சைகளை சந்தித்து பின் சுமுகமாக திரைப்படம் வெளியானது. அரசியல் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் குறித்து ரசிகர்கள்  பலரும் சமூக வலைதளங்களில் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று ஆளும் கட்சியில் உள்ள அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, சிவி சண்முகம் உட்படப் பலரும் இந்தப் படத்திற்கு பலரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். படத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும், இலவசங்கள் குறித்தும் காட்சிகள் வைக்கப்பட்டிருப்பதாகவும் அதை நீக்கக் கோரியும் பலரும் தெரிவித்து வருகின்றனர். இன்று பல இடங்களில் சர்கார் படத்திற்காக வைக்கப்ட்ட பேனர்களையும் அ.தி.மு.க வினர் கிழித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே தற்போது ``இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய அவரது வீட்டிற்குக் காவல்துறை விரைந்துள்ளது" என சன் பிக்சர்ஸ் நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தது. ஆனால் விசாரணையில் முருகதாஸ் வீட்டில் இல்லாததைத் தெரிந்துகொண்ட போலீஸ் சென்று விட்டனர் எனவும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால் இது குறித்து போலீஸ் தரப்பில் விசாரிக்கையில், ``வழக்கமான ரோந்து பணிக்காகவே அவரது வீட்டின் அருகே சென்றோம். கைது செய்வதற்காக அல்ல" என மறுப்பு தெரிவித்துள்ளனர். அதேநேரம் பாதுகாப்பு பணிக்காகவே போலீஸ் சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் முருகதாஸை கைது செய்ய உள்ளதாக வெளியான தகவலுக்கு நடிகர் விஷால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவிட்டுள்ள அவர், ``எதற்காக முருகதாஸ் வீட்டில் போலீஸ்?. சர்கார் அனுமதியளித்து மக்கள் பார்த்த பின் சர்ச்சை எதற்காக எனத் தெரியவில்லை. எதுவும் தவறான விஷயங்கள் நடக்காதது என நம்புவோம்" எனக் கூறியுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க