வெளியிடப்பட்ட நேரம்: 02:03 (09/11/2018)

கடைசி தொடர்பு:02:03 (09/11/2018)

`நோக்கம் நிறைவேறிவிட்டதா மோடி அவர்களே?' - கொந்தளித்த ஸ்டாலின்

மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் நடைபெற்றது. இதில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், திருச்சி தெற்கு மாவட்டசெயலாளர் கே.என்.நேரு,கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா எனப் பலரும் கலந்துகொண்டனர். 

 

கூட்டத்தில் பேசத்தொடங்கிய தி.மு.க தலைவர் ஸ்டாலின், ``இந்தக் கூட்டத்தினுடைய நோக்கம் என்னவென்று சொன்னால், மத்தியிலே நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய பாசிச பாரதிய ஜனதா ஆட்சியையும், தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய ஊழல் நிறைந்த அ.தி.மு.க ஆட்சியையும் ஒரே நேரத்தில் நாட்டை விட்டு அப்புறப்படுத்த வேண்டும் என்ற அந்த உணர்வோடு ஒரு ஜனநாயகப் போரினை இந்த பெரம்பலூரில் நான் தொடங்கி இருக்கிறேன். நம்முடைய இந்திய தேசத்திற்கு ஒரு புதிய பிரதமரை உருவாக்குவதற்கு நாடாளுமன்றத்தினுடைய தேர்தலை நாமெல்லாம் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறோம். நாடாளுமன்றத் தேர்தல் மாத்திரம் வருகின்றதா? அல்லது நாமெல்லாம் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிருக்கக்கூடிய சட்டமன்றத் தேர்தலும் சேர்ந்து வரப்போகிறதா தெரியவில்லை. 

அது எந்த நிலையில் வந்தாலும், எப்படிப்பட்ட சூழலில் வந்தாலும், எந்த நேரத்தில் வந்தாலும், அதை நாம் சந்திக்கத் தயாராக இருக்கிறோம். இந்தக் கூட்டத்தை யாரும் மறந்துவிட முடியாது. இன்றைக்குத் தமிழ்நாட்டில் ஊழல் நிறைந்த ஆட்சியாக அ.தி.மு.க ஆட்சியையும், மத்தியிலே பாசிச பாரதிய ஜனதா ஆட்சியையும் ஒரேயடியாக இந்த நாட்டை விட்டு விரட்டக்கூடிய வல்லமை நம்முடைய தி.மு.க.விற்கு தான் உண்டு என்பதை அறிவிக்கின்ற கூட்டம் தான் இந்தக் கூட்டம் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. 

1000 ரூபாய் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த நேரத்தில் மோடி, கறுப்புப் பணம் ஒழியும்,  ஊழல் அடியோடு ஒழிக்கப்படும், கள்ளநோட்டு குறையும், தீவிரவாதம் அடக்கப்படும் என்று சொன்னார். இது எல்லாம் நிறைவேறிவிட்டதா? ஏதோ மோடி மஸ்தான் வித்தைக் காட்டி மக்களை ஏமாற்றலாம் என நினைத்துவிட்டார். ஆனால் ஒரு போது இனி ஏமாற்ற முடியாது. மத்திய, மாநில அரசுகளை அகற்ற நேரம் வந்துவிட்டது என்று ஆளும் அரசுகளைக் கடுமையாக தாக்கிப் பேசினார்.