விவசாயிகளின் கோரிக்கைக்கு செவி சாய்த்த என்.எல்.சி! உபரி நீருக்குக் கிடைக்கும் தீர்வு | NLC accepted Vridhachalam farmers to use the waste Water

வெளியிடப்பட்ட நேரம்: 02:57 (09/11/2018)

கடைசி தொடர்பு:02:57 (09/11/2018)

விவசாயிகளின் கோரிக்கைக்கு செவி சாய்த்த என்.எல்.சி! உபரி நீருக்குக் கிடைக்கும் தீர்வு

நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் உள்ள நிலக்கரி சுரங்கங்களில் அதிக திறன் கொண்ட ராட்சச மோட்டார்கள் மூலம் அதிக அளவில் நிலத்தடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் நெய்வேலியைச் சுற்றியுள்ள விருத்தாசலம், கம்மாபுரம், சேத்தியாத்தோப்பு, வடலூர் போன்ற பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது என விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். 

என் எல் சி ஆய்வு

என்.எல்.சி நிறுவனம் வெளியேற்றும் உபரி நீரை வாலாஜா ஏரியில் தேக்கி கீழ்ப் பகுதிகளான வடலூர், குறிஞ்சிப்பாடி, புவனகிரி பகுதிகளில் விவசாயம் நடந்து வருகிறது. இதேபோல் என்.எல்.சி உபரி நீரை மேல் பகுதி கிராமங்களான கோட்டேரி, கானாதுகண்டான், கோபுராபுரம், செம்பளக்குறிச்சி, கவணை வழியாக வயலூர் ஏரியில் விட்டு, பின்னர் மணிமுக்தாற்றில் விட வேண்டும் என்பது அப்பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை. இது குறித்து அப்பகுதி விவசாயிகள் என்.எல்.சி. நிறுவனம் மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோரிடம் கோரிக்கை மனுக்கொடுத்துள்ளனர்.

 

என்.எல்.சி

இந்நிலையில் கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் இத்திட்டத்தை ஆய்வு செய்ய பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து பொதுப்பணித்துறை ஆய்வு பிரிவு  உதவி செயல் பொறியாளர் சாந்தி தலைமையில் அதிகாரிகள் இன்று மேற்கண்ட வழித்தடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது முன்னாள் சேர்மன் சுந்தரராஜன், ஜனநாயக விவசாய சங்க தலைவர் கந்தசாமி, கடலூர் மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் கார்மாங்குடி வெங்கடேசன், வயலூர் சுரேஷ், பேரூர் குஞ்சிதபாதம் உட்படப் பலரும் உடனிருந்தனர்.

இது குறித்து கடலூர் மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் கார்மாங்குடி வெங்கடேசன் கூறியதாவது, ``என்.எல்.சி. நிறுவனம் அதிக திறன்கொண்ட ராட்சச மோட்டார்கள் மூலம் நிலத்தடி நீரை உறிஞ்சுவதால் இப்பகுதி கிராமங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். என்.எல்.சி உபரி நீரைக் கீழ் பகுதி கிராமங்களின் பயன்பாட்டிற்குப் போக மீத முள்ள உபரி நீரை  மேற்கண்ட கிராமங்கள் வழியாக மணிமுக்தாற்றில் விட்டால் இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். இதனால் விவசாயிகளும் பயன்பெறுவார்கள். இது குறித்து நாங்கள் பல முறை என்.எல்.சி நிறுவனத்திடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் மனுக்கொடுத்துள்ளோம்.

இந்நிலையில் தற்போதைய கலெக்டர் அன்புச்செல்வன் பொதுப்பணித்துறை அதிகாரிகளைத் திட்டம் குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளார். இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் விருத்தாசலம் பகுதி விவசாயிகளுக்கு இது வரப்பிரசாதமாக அமையும். என்.எல்.சி நிர்வாகம் சமூக பொறுப்புணர்வு திட்ட நிதியைச் சம்பந்தமில்லாத பகுதிகளில் செலவு செய்கிறது. அந்த நிறுவனம் அருகில் உள்ள கிராமங்களின் நலனைக் கருத்தில்கொண்டு இத்திட்டத்தை செயல்படுத்த முன் வர வேண்டும்" இவ்வாறு அவர் கூறினார்.