வெளியிடப்பட்ட நேரம்: 04:09 (09/11/2018)

கடைசி தொடர்பு:10:04 (09/11/2018)

கூடுதல் கட்டணம் புகார் - 'சர்கார்' படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களில் ஆய்வு!

'சர்கார்' படத்திற்குக் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக வந்த புகாரையடுத்து, புதுக்கோட்டையில் சர்க்கார் படம் ஓடும் தியேட்டர்களில் வருவாய் கோட்டாட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

சர்கார்

விஜய் நடித்த சர்கார் திரைப்படம், கதை தொடர்பான பல சர்ச்சைகளுக்கு பின்னர்  தீபாவளி அன்று திரைக்கு வந்தது. புதுக்கோட்டையில், சர்கார் திரைப்படம் ஆர்.கே.பி உள்ளிட்ட 3 திரையரங்குகளில்  வெளியிடப்பட்டது. திரையிடப்பட்டதில், இருந்தே கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் புகார் எழுந்தது. இந்நிலையில், தொடர்ந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக வந்த புகாரை அடுத்து ஆர்கேபி திரையரங்கில் வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார். சீட்டு கவுண்டர்களில் ரசிகர்களிடம் வசூலிக்கப்படும் கட்டணங்கள் குறித்துக் கேட்டறிந்தார். திடீர் ஆய்வு பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆய்வுக்குப் பின்பு வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார் கூறும்போது, ‘கூடுதல் காட்சிகள் திரையிடப்படுகிறதா? அனுமதிக்கப்பட்ட இருக்கைகளுக்கு அதிகமாகப் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்களா? கட்டண விபரங்கள் குறித்தும் ஆய்வு செய்தோம். சீட்டு கவுண்டர்களில் ஏதும் முறைகேடு நடைபெறவில்லை. ஆனால், இணையத்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது தெரியவந்துள்ளது. இணையச் சீட்டு விற்பனையைத் தடை செய்வது குறித்து மாவட்ட ஆட்சியருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சர்கார் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வலியுறுத்தி அதிமுகவினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட நிலையில், புதுக்கோட்டை அதிமுக சார்பில் எவ்வித போராட்டமும் நடைபெறவில்லை. வழக்கம் போல், காட்சிகள்  திரையிடப்பட்டது.