வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (09/11/2018)

கடைசி தொடர்பு:10:02 (09/11/2018)

கேரள பா.ஜ.க தலைவர் மீது பிணையில் வரமுடியாத பிரிவுகளில் வழக்கு!

'சபரிமலை தந்திரி, தன்னிடம் கேடுவிட்டுதான் கோயில் நடையை அடைத்தார்' எனப் பேசிய கேரள பா.ஜ.க தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை மீது பிணையில் வரமுடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீதரன் பிள்ளை

சபரிமலை போராட்டம்குறித்து கோழிக்கோட்டில் பேசிய கேரள மாநில பா.ஜ.க தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை, "சபரிமலை போராட்டம் என்பது பா.ஜ.க-வுக்கு மிகப்பெரிய வாய்ப்பு. பா.ஜ.க திட்டத்தின்படிதான் இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. அக்டோபர் மாதம் சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டு, சில பெண்கள் அங்கு சென்றபோது, நடையை அடைக்கப்போவதாக தந்திரி கண்டரரு ராஜீவரு அறிவித்தார். அவ்வாறு அவர் அறிவிக்கும் முன்பு என்னுடன் ஆலோசித்தார். இவ்வாறு அறிவித்தால், அது நீதிமன்ற அவமதிப்பு ஆகுமா எனக் கேட்டார். அவ்வாறு அறிவிப்பது நீதிமன்ற அவமதிப்பு ஆகாது. நீங்கள் கவலைப்பட வேண்டாம், பா.ஜ.க உங்கள் பின்னால் இருக்கிறது எனக் கூறினேன். 

அதன்பிறகுதான் அவர் தைரியமாக அதை அறிவித்தார். தந்திரியின் அறிவிப்புக்குப் பிறகுதான் போலீஸார் பின் வாங்கினர். கோயிலுக்குள் பெண்கள் வராமல் தடுக்கப்பட்டனர்" என்று பேசியிருந்தார். ஆனால், ஸ்ரீதரன் பிள்ளையின் பேச்சுக்கு தந்திரி மறுப்பு தெரிவித்திருந்தார். இது கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கிடையே, ஸ்ரீதரன் பிள்ளையின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஷைபி என்பவர் கோழிக்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து, கலவரத்தைத் தூண்டுதல் உள்ளிட்ட, பிணையில் வரமுடியாத பிரிவுகளின் கீழ் ஸ்ரீதரன் பிள்ளை மீது கோழிக்கோடு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.