வெளியிடப்பட்ட நேரம்: 04:38 (09/11/2018)

கடைசி தொடர்பு:08:43 (09/11/2018)

எங்க அம்மாவை இழிவுப்படுத்தி படம் எடுப்பதா? - திருச்சியில் கொந்தளித்த அ.தி.மு.க-வினர்

சர்கார் திரைப்படத்துக்கு எதிராக அதிமுகவினர்
சர்கார் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வலியுறுத்தி தமிழகம் முழுக்க ஆங்காங்கே அ.தி.மு.க வினர் தியேட்டர்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். அந்த வகையில், திருச்சியில் போராட்டம் நடத்திய அதிமுகவினரிடம் போலீஸார் கெஞ்சிய சம்பவங்களும் நடந்தன.
 
இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வெளியாகி உள்ள சர்கார் திரைப்படத்தில் இலவசங்கள் குறித்தும், அ.தி.மு.க-வை விமர்சிக்கும் வகையிலான காட்சிகளும் அமைக்கப்பட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டி, சர்கார் திரைப்படத்தில் வரும் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என அ.தி.மு.க -வினர் வலியுறுத்தி வருகின்றனர். 
 
இந்நிலையில், திருச்சியில் சர்கார் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள எல்.ஏ சினிமாஸ் மற்றும் சோனா மீனா தியேட்டர்களில், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என வலியுறுத்தி அ.தி.மு.க-வினர், திரையரங்குகள் முன் வைக்கப்பட்டிருக்கும்  பேனர்களைக்   கிழித்தெறிந்தனர்.
 
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் சர்கார் படம் திரையிடப்பட்டிருந்த சோனா மீனா திரையரங்கம் முன்பு திரண்ட திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க -வினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கூட்டத்தில் இருந்த ஒருவர்  மடமடவென  திரையரங்கு வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பதாகைகள் மேலேறி, நடிகர் விஜய்யின்  பதாகைகளைக் கிழித்தெறிந்தார்.
 
 இயக்குநர் முருகதாஸையும், நடிகர் விஜய்யையும் கண்டித்துக் கண்டன முழக்கங்களை எழுப்பியதுடன் `எங்க அம்மாவைப் பத்தி விமர்சனம் பண்ணி படம் எடுத்த முருகதாஸை போலீஸ் கைதுசெய்ய வேண்டும் என்றும், இல்லையென்றால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்' என்றும் எச்சரித்தனர். இதுவே முதல் முறை சர்கார் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்களைக் காட்சிகளை எடுத்த முருகதாஸை கைதுசெய்யவில்லை என்றால் அடுத்த போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளதாக அ.தி.மு.க-வினர் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 
 
 காவல் துறையினரின் சமாதான பேச்சுவார்த்தையை அடுத்து, போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
 
இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க