வெளியிடப்பட்ட நேரம்: 05:30 (09/11/2018)

கடைசி தொடர்பு:08:32 (09/11/2018)

ஐ.நா சபையால் பாராட்டப்பட்ட திட்டங்களைக் கொச்சைப்படுத்துவதா? - ஆர்.பி.உதயகுமார் காட்டம்

ஜெயலலிதாவை இழிவுபடுத்தியுள்ளதாகவும், அ.தி.மு.க அரசின் திட்டங்களை விமர்சனம் செய்துள்ளதையும் கண்டித்து, 'சர்கார்' படத்துக்கு எதிராக அ.தி.மு.க எம்.எல்.ஏ ராஜன்செல்லப்பா மதுரையில் இன்று தியேட்டர் முன் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்த, அதைத் தொடர்ந்து அ.தி.மு.க-வினர், தமிழகம் முழுவதும் பல இடங்களில் சர்காருக்கு எதிராகப் போராட்டங்களை நடத்திவருகிறார்கள். 

ஆர் பி உதயகுமார்

இந்த நிலையில், இதுகுறித்து வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தங்களின் வியாபார நோக்கத்துக்காகப் புரட்சித்தலைவி அம்மா கொண்டுவந்த சிறப்பான  திட்டங்களைக் கொச்சைப்படுத்தும் வகையில், சர்கார் படத்தில் சில காட்சிகள் வந்துள்ளன. இது, உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. வியாபார நோக்கத்திற்காகவும், எதை வேண்டுமானாலும் சொல்லலாம் என்றால் அது நியாயமில்லை. மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதை ஜெயலலிதா பேரவை வன்மையாகக் கண்டிக்கிறது. 

அந்தக் காட்சிகளை அவர்கள் உடனே நீக்க வேண்டும். அம்மாவின் புகழுக்கு களங்கம் விளைவிப்பவர்களுக்கு, ஜனநாயக ரீதியில் அதை முதலில் கண்டிப்போம். தொடர்ந்து இதுபோல செய்துகொண்டிருந்தால், உயிரைக் கொடுத்தாவது அவரது புகழைக் காப்போம். அம்மா கொண்டுவந்த திட்டங்களைப் பற்றி விவாதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஐ.நா சபையால் பாராட்டப்பட்ட திட்டங்களையெல்லாம் கொச்சைப்படுத்துவது என்பது, அம்மா புகழை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழினத்தையும் கொச்சைப்படுத்துவதாகும். காட்சிகளை நீக்கவில்லை என்றால், ஜெயலலிதா பேரவை சார்பில் தக்க பதிலடி கொடுப்போம்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க