வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/11/2018)

கடைசி தொடர்பு:11:25 (09/11/2018)

`இரண்டு வெள்ளி, நூற்றுக்கும் மேற்பட்ட தங்கம்'! - அசத்தும் சீர்காழி மாணவி

இரு தினங்களுக்கு முன், உலக அளவில் அமெரிக்காவில் நடைபெற்ற யோகா போட்டியில், சீர்காழி மாணவி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். 

மாணவி சுபானு

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியை அடுத்த வேட்டங்குடியைச் சேர்ந்த மணிவண்ணன் - சீதா தம்பதியின் மகள், சுபானு. மணிவண்ணன் வெளிநாட்டில் வேலைபார்த்தவர். அங்கு வேலைபார்க்கும்போது முதுகெலும்பில் பிரச்னை ஏற்பட்டு, 2003-ல் நாடு திரும்பிவிட்டார். தாய் சீதா, யோகா வகுப்பு நடத்திவருகிறார். சீதா தான் சுபானுவின் யோகா குரு. யோகாவில் சாகசங்கள் பல புரிந்து பதக்கங்களை வாங்கிக் குவித்த சுபானு, நாகையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வரின் நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிந்த பின்னரும்கூட, சுபானுவின் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் சுபானுவின் யோகா திறமைகளைப் பார்த்து வியந்து பாராட்டினர்.

கடந்த ஆண்டு நவம்பரில், தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச யோகா போட்டியில் சுபானு இரண்டு தங்கப்பதக்கங்களை வென்றார். உடன் சென்றிருந்த சுபானுவின் அம்மா சீதாவும் அவரது வயது பிரிவினருக்கான யோகா போட்டியில் கலந்துகொண்டு தங்கம் வென்றார். 2017-ல் துபாயில் நடைபெற்ற உலக அளவிலான யோகா போட்டியில் 1 தங்கப்பதக்கமும், 2018-ல் மலேசியாவில் நடைபெற்ற உலக அளவிலான யோகா போட்டியில் 1 தங்கப்பதக்கமும் பெற்றார்.

மாணவி சுபானு

இதுவரை தென்னிந்தியா, வட இந்தியா மற்றும் தேசிய அளவில், தான் கலந்துகொண்ட அத்தனை யோகா போட்டிகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட தங்கப்பதக்கங்களை வென்றிருக்கிறார் சுபானு. இதுவரை இரண்டு போட்டிகளில் மட்டுமே வெள்ளிப்பதக்கம் பெற்று இரண்டாம் நிலைக்கு இறங்கியிருக்கிறாள். இந்நிலையில், நவம்பர் 5-ம் தேதி தென் அமெரிக்காவில் உள்ள ரோசாரியோவில் நடந்த உலக அளவிலான யோகா போட்டியில் 12 - 15 வயதிற்கான பிரிவில் கலந்துகொண்டு சுபானு முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். வெற்றிபெற்ற மாணவி சுபானுவுக்கு பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளது.

"இளம் சாதனையாளர் விருது, யோகா கலாமணி, யோக பாரதி, யோக பரணி, யோக அர்ஜுனா, லிட்டில் ஸ்டார்" எனப் பல விருதுகளைக் குவித்துவைத்திருக்கும் சுபானு, 15 நிமிடங்களில் ஆணிப் பலகையின்மீது அமர்ந்து 316 ஆசனங்கள் செய்துள்ள உலக சாதனைக்கு சொந்தக்காரர். பிரிட்ஜ் ஆசனம் செய்து இரண்டு முறை கின்னஸில் இடம்பிடித்துள்ளார். இவரின் வெற்றியை மக்கள் பாராட்டுவது மட்டுமின்றி அரசும் இம்மாதிரியான மாணவர்களைப் பாராட்டினால் இந்தியாவில் பல தங்க மங்கைகளை உருவாக்க முடியும்.