வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (09/11/2018)

கடைசி தொடர்பு:16:31 (09/11/2018)

'சர்கார்' பற்றிப் பேச நேரமிருக்கிறது, ராஜலெட்சுமியைப் பற்றி பேச நேரமில்லையா? - திருமுருகன் காந்தி

" 'ர்கார்' படத்துக்கு எதிராகப் பேசுவதற்கு அமைச்சர்களுக்கும் அரசுக்கும் நேரம் இருக்கிறது. ராஜலட்சுமி என்ற சிறுமி படுகொலை பற்றிப் பேச நேரமில்லை." என்று தமிழக அரசிடம் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

திருமுருகன் காந்தி

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி ராஜலட்சுமி, கடந்த மாதம் 22-ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார் என்பவரின் ஆசைக்கு இணங்க மறுத்ததால், கொடூரமான முறையில் தலையை வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்விக்குப் பதிலளித்த திருமுருகன் காந்தி, "நிர்பயாவுக்கும், ஸ்வாதி கொலைக்கும் அரசுகள் செலுத்திய கவனத்தை, ராஜலட்சுமி படுகொலையில் ஏன் செலுத்தவில்லை. இன்னமும் இந்தப் படுகொலை பற்றி முறையான விசாரணை தொடங்கவில்லை. முதல்வரிடமிருந்து எட்டுவழிச் சாலைக்கு எதிரான போராட்டத்துக்கு எதிராக வந்த பதற்றம், ஒரு பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடுமைக்கு எதிராக எழவில்லை. அதுவும், முதலமைச்சரின் தொகுதி உள்ள மாவட்டத்திலேயே இந்தக் கொடூர சம்பவம் நடந்திருக்கிறது. ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை. இது மிகவும் வருத்தமும் வேதனையையும் அளிக்கிறது. பொய் குற்றச்சாட்டுகளில் சமூக செயற்பாட்டாளர்களைக் கைதுசெய்து ஒடுக்கும் இந்த அரசு, இதுபோன்ற பெண்களுக்கெதிரான வன்முறைகளை  ஊக்குவிக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது. அமைச்சர்களுக்கும் அரசுக்கும் சர்கார் படத்தைப் பார்ப்பதற்கும், அதில் உள்ள வசனங்களை நீக்குவதுகுறித்துப் பேசுவதற்கும் நேரம் இருக்கிறது. ராஜலட்சுமி என்ற பெண்குழந்தை படுகொலை பற்றிப் பேச நேரமில்லை. இந்தப் படுகொலை பற்றி அரசோ, அமைச்சர்களோ எந்தவித அதிர்ச்சியையும் வெளியிடவில்லை. பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு எந்த வகையிலும் உதவவில்லை" என்று தமிழக அரசை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க