வெளியிடப்பட்ட நேரம்: 12:17 (09/11/2018)

கடைசி தொடர்பு:12:17 (09/11/2018)

`சர்கார்' அரசியல் மூலம் என்ன சொல்ல வருகிறார் விஜய்?

`சர்கார்' அரசியல் மூலம் என்ன சொல்ல வருகிறார் விஜய்?

`சர்கார்’திரைப்படம் திரை அரங்குகளில் மட்டுமல்லாமல் அரசியல் அரங்கிலும் அதிர்வுகளை ஏற்படுத்த ஆரம்பித்திருக்கிறது. இந்த நேரத்தில், விஜய் படங்களில் `பாலிடிக்ஸ்’ எப்படியெல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதை கொஞ்சம் திரும்பிப் பார்க்கலாம். 

படம் முழுக்க அரசியல் பேசும் விஜய்யின் படங்கள் குறைவாகவே உள்ளன. ஆனால், படத்தின் சில காட்சிகளில் மட்டுமே அரசியல் பேசும்  படங்கள் நிறைய உண்டு.

`மாண்புமிகு மாணவன்’ படத்திலிருந்து, விஜய் அரசியல் பேச ஆரம்பித்ததாக எடுத்துக் கொள்ளலாம். அதில், அராஜகம் செய்யும் அரசியல்வாதி வில்லனை அழிக்கும் ஹீரோ மாணவனாக நடித்திருந்தார். கொலை, கோர்ட், கேஸ், தண்டனை எனப் போகும் அந்தப் படம், விஜய்யின் ஆரம்பகாலங்களில் வெளிவந்து தோல்வியடைந்தது. `தமிழன்’ படத்தில் சமூகப் பிரச்னைகளைச் சாடும் வழக்கறிஞராக விஜய் தோன்றினார். ஆரம்பகாட்சியே விஜய்க்கு அஞ்சல்தலை வெளியிடும் காட்சி! அதில் அரசியல் பேசியதைவிட சட்டத்தைப் பற்றியே அதிகம் பேசியிருந்தார். இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு மகனாகப் பிறந்துவிட்டு சட்டம் பேசவில்லை என்றால் எப்படி!?

`தமிழன்’ படத்துக்கும் `முதல்வன்’ படத்துக்கும் ஒரு சிறிய ஒற்றுமை இருக்கிறது. `படித்த இளைஞன் நாட்டை மாற்ற களமிறங்குகிறான்’ என்பதே இரண்டு படங்களின் ஒன்லைனும். சர்காரும் இதே லைன்தான்! இயக்குநர் ஷங்கர் இயக்கி, அர்ஜூன் நடிப்பில் வெளியான ``முதல்வன் படத்தை மிஸ் செய்த வருத்தம் இப்போதும் விஜய்க்கு உண்டு” என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

ஒருவகையில் `சிவகாசி’ படமும் அரசியல் சாயல் கொண்ட படம்தான். அதில், சென்னையிலிருந்து சொந்த ஊருக்குச் செல்லும் விஜய், தன் தங்கையை எம்.எல்.ஏ-வாக வெற்றிபெறவைப்பார். `மதுர' படத்தில் கலெக்டர் கேரக்டர். தீம் ஸாங்கை ஒலிக்கவிட்டு ஒவ்வொரு தீமையாகத் தேடித்தேடி அழிக்கும் ஆக்ரோஷ அதிகாரியாக விஜய் நடித்திருந்தார். அதில் வில்லன் வேடத்தில் நடித்திருந்த பசுபதிக்கு, அரசியலில் நல்லது, கெட்டதுகளைத் தீர்மானிக்கும் `கிங் மேக்கர்’ கேரக்டர். அவரை அழிப்பதுதான் கதை! `சுறா’ படத்திலும் வில்லன் அரசியல்வாதிதான்.

சர்கார்

`தனக்கு தலைவனாகும் ஆசையும் ஆர்வமும் இருக்கிறது’ என்பதை விஜய் அழுத்தமாக அறிவித்த படம் `தலைவா’. ஆரம்பத்தில் அந்தப் படம், தெலுங்கில் ஹிட்டடித்த `லீடர்' என்ற அரசியல் படத்தின் ரீமேக் என்றார்கள். அதைச் செய்திருந்தால், இப்போது சர்காருக்கு வெடித்திருக்கும் அரசியல் சர்ச்சைகள், அப்போதே வெடித்திருக்கக்கூடும். ஏனென்றால், லீடர் படத்தின் கதை அப்படி! ஆனால், அரசியல் சாயம் ஏதுமில்லாமல் `நாயகன்’ பாணி கேங்ஸ்டர் படமாக தலைவா வெளிவந்தது. ஆனாலும், அதில் சத்யராஜை `அண்ணா’வாகவும், விஜயை `அண்ணா’வின் வாரிசாகவும் சித்திரிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அதன் `டைம் டூ லீட்’ சர்ச்சைகள் எல்லோரும் அறிந்ததே. `லீடர்’ படமும் விஜய்யின் பக்கெட் லிஸ்டில் இருக்க வாய்ப்புகள் அதிகம். 

தலைவா-வுக்குப் பிறகான விஜய்யின் படங்களில் சமூகப் பிரச்னைகளும், அரசியல் சாயமும் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது எனலாம். `கத்தி'-யில் கார்ப்பரேட் கம்பெனிகளின் அரசியல், பைரவாவில் கல்வி நிறுவனங்களின் அரசியல், மெர்சலில் மருத்துவ அரசியல், சர்காரில் கட்சிகளின் அரசியல் என அடுத்தடுத்து அரசியல் பேசும் படங்களாவே நடித்துக்கொண்டிருக்கிறார் விஜய்.

தன்னுடைய படங்களில் அரசியல், சமூக விஷயங்கள் இருக்கும்படி பார்த்துக்கொள்ளும் விஜய், சில காட்சிகளில் எம்.ஜி.ஆர் ரெஃபரன்ஸையும் கொண்டுவந்து விடுவதில் தவறுவதில்லை. ``எம்ஜிஆர் ஆட்சியைக் கொடுப்பேன்” என்று அறிவித்த ரஜினியைவிட, அப்படி அறிவிக்காத விஜய்யே எம்ஜிஆர் ரெஃபரன்ஸை படங்களில் அதிகம் பயன்படுத்தி வருகிறார். 

`வசீகரா’ படத்தில் தீவிர எம்ஜிஆர் ரசிகனாக விஜய் நடித்திருப்பார். அது கதைக்குத் தேவையில்லாததாக இருந்தாலும், விஜய் விரும்பி செய்த கேரக்டர் அது. அந்தப் படத்தில் இடம்பெற்ற `ஆஹா என்பார்கள்..” பாட்டில் அ.தி.மு.க. கட்சிக்கொடியை பிரதிபலிக்கும் டீ ஷர்ட் அணிந்து நடனமும் ஆடியிருப்பார்.

எம்.ஜி.ஆரின் வெற்றிப்படங்களில் ஒன்றான `வேட்டைக்காரன்’ டைட்டிலை வைத்து மீண்டும் படமெடுத்தார் விஜய். இந்தப் படத்தில் ``கூடப்பொறந்தா தான் அண்ணனா?” என்ற வசனத்தை, எம்.ஜி.ஆர் ஸ்டைலில் பேசியிருப்பார். வேலாயுதம் படத்தில் `தங்கச்சி சென்டிமென்ட்’ பாடலொன்று இருக்குமே... அதை கேட்டிருக்கிறீர்களா? `ரத்தத்தின் ரத்தமே' எனத் தொடங்கும் அந்தப் பாடலில், `உடன்பிறப்பே' என்ற வார்த்தைகளும் இருக்கும். அதில், ``நல்லவேளை நான் ஆளுங்கட்சி”, ``என் கட்சி ஜெயிக்கணும்..” போன்ற வசனங்களைப் பேசியிருப்பார். 

`மெர்சல்' படத்தில் `அதுக்கும் மேலே’ போயிருப்பார். அந்தப் படத்தின் ஃபிளாஷ்பேக் காட்சிகளில் ஒரு தியேட்டர் சீக்குவன்ஸ் வரும். அதில், திரையில் எம்.ஜி.ஆர் நடந்து வர, அதற்கு இணையாக விஜய் நடந்து வருவார். இப்படி இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.  அரசியலை நோக்கிய பயணத்தில் விஜய் விவரமாகத்தான் இருக்கிறார்!


டிரெண்டிங் @ விகடன்