வெளியிடப்பட்ட நேரம்: 10:06 (09/11/2018)

கடைசி தொடர்பு:10:48 (09/11/2018)

‘தாமதமான சிகிச்சை; தாக்குதலில் ஈடுபட்ட நோயாளி’ - மருத்துவர்களின் போராட்டத்தால் மக்கள் அவதி!

தற்கொலைக்கு முயன்ற வாலிபர் ஒருவர், உடனடியாகத் தனக்கு சிகிச்சையளிக்கவேண்டி மருத்துவரைத் தாக்கிய சம்பவம்,  செங்கல்பட்டு மருத்துவமனை மருத்துவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. பாதுகாப்புவேண்டி மருத்துவர்கள் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து, அந்த நபர் கைதுசெய்யப்பட்டார்.

வாலிபர்

காஞ்சிபுரம் மாவட்டம் சதுரங்கப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். நேற்று மாலை தன் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உயிருக்குப் பயந்த வெங்கடேஷ், உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்குள்ள மருத்துவர்கள், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு வெங்கடேஷை பரிந்துரைசெய்து அனுப்பினார்கள். சிகிச்சைக்காக நேற்று மாலை சுமார் 5.30  மணிக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார் வெங்கடேஷ். இரவு 7 மணியாகியும்  அவருக்கு சிகிச்சை அளிக்காமல், மற்ற நோயாளிகளுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளித்துவந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கொதிப்படைந்த வெங்கடேஷ், எனக்கு முதலில் சிகிச்சை அளியுங்கள் என அங்குள்ள மருத்துவர்களிடம் கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். மருத்துவர்கள் அலட்சியமாக  பதில் அளித்ததால், இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

செங்கல்பட்டு மருத்துவர்கள் போராட்டம்

ஆத்திரமடைந்த வெங்கடேஷ், கார்த்திக் சந்திரன் என்ற மருத்துவரைத் தாக்கியுள்ளார். காயமடைந்த அந்த மருத்துவர், உடனே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதைக் கண்டித்து செங்கல்பட்டு மருத்துவமனை வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் ‘எங்களுக்கு போதுமான பாதுகாப்பு இல்லை’ என மருத்துவமனை நிர்வாகத்தைக் கண்டித்து போராட்டம் செய்தனர். அரசு மருத்துவமனை முதல்வர் புகாரின்படி, காவல் துறையினர் வெங்கடேஷையும் உடன் வந்த இருவரையும்  கைது செய்தனர். ஆனாலும் மருத்துவர்கள் நேற்று இரவு முதல் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்திவருகிறார்கள். மாநில மருத்துவக் கல்லூரிகள் இயக்குநர் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருவதால், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் சிகிச்சை பெறமுடியாமல் அவதியுற்றிருக்கின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க