வெளியிடப்பட்ட நேரம்: 11:08 (09/11/2018)

கடைசி தொடர்பு:11:08 (09/11/2018)

போலீஸ் உதவியுடன் இரவில் 'சர்கார்' பேனர்களை அகற்றிய ரசிகர்கள்!

`சர்கார்' திரைப்படம் வெளியானதிலிருந்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கக் கோரியும், விஜய், முருகதாஸ் உள்ளிட்டவர்களின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், தமிழகம் முழுவதும் அ.தி.மு.க-வினர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

சர்கார் பேனர்கள்

தாம்பரம் நேஷனல் திரையரங்கில், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள், சிட்லபாக்கம் ராஜேந்திரன், ஆறுமுகம், வாலாஜாபாத் கணேசன் ஆகியோர் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க-வினர், அங்குள்ள சர்கார் திரைப்பட பேனர்களைக் கிழித்து எரிந்தனர். திரையரங்கக் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டன. இதனால் தாம்பரம், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் பரபரப்பு ஏற்பட்டது.  இதைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் பகுதியில் உள்ள திரையரங்குகளில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

சர்கார் பேனர்கள் அகற்றம் விஜய் ரசிகர்கள்

காஞ்சிபுரம் பகுதியில் `சர்கார்' திரைப்படத்துக்காக, விஜய் ரசிகர்கள் கடந்த 5-ம் தேதி பேனர்கள் வைத்தனர். அந்த பேனர்கள் இன்னும் அகற்றப்படவில்லை. இந்த நிலையில், காஞ்சிபுரம் பகுதியிலும் அ.தி.மு.க-வினர் பேனர்களைக் கிழிக்க இருப்பதாக வந்த தகவலையடுத்து, காஞ்சிபுரம் காவல் துறையினர் விஜய் ரசிகர் மன்றத்தினரை அழைத்து, பேனர்களை உடனடியாக அகற்றுமாறு கூறினார்கள். அனுமதி இல்லாமல் பேனர் வைத்ததாலும், அசம்பாவிதங்களைத் தடுக்கும் நோக்கத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேனர்களை அகற்ற விஜய் ரசிகர்கள் ஒப்புக்கொண்டனர். நேற்று மாலையிலிருந்து இரவு முழுவதும் விஜய் ரசிகர்கள் காவல் துறையினருடன் இணைந்து சர்கார் பேனர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுவந்தனர். தற்போது, காஞ்சிபுரத்தில் 'சர்கார்' படத்தின் ஒரு பேனர்கூட தென்படவில்லை.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க