வெளியிடப்பட்ட நேரம்: 11:35 (09/11/2018)

கடைசி தொடர்பு:11:43 (09/11/2018)

முன்ஜாமீன் கேட்கும் ஏ.ஆர்.முருகதாஸ்! - அவசரமாக விசாரிக்கக் கோரிக்கை

'சர்கார்' சர்ச்சை விவகாரத்தில், அந்தப் படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். 

முருகதாஸ்

விஜய் நடிப்பில், ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளியன்று `சர்கார் ' திரைப்படம்' வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. படம் வெளியாவதற்கு முன்பே கதை தொடர்பாகப் பல சர்ச்சைகளைச் சந்தித்து, பின் சுமுகமாக திரைப்படம் வெளியானது. அரசியல் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம்குறித்து ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கருத்துகளைத் தெரிவித்துவருகின்றனர். 

இதையடுத்து நேற்று அ.தி.மு.க-வின் அமைச்சர்கள் பலரும் இந்தப் படத்துக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். படத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும், அரசின் இலவசப் பொருள்கள்குறித்த காட்சிகள் வைக்கப்பட்டிருப்பதாகவும் அதை நீக்கக் கோரியும் பலரும் தெரிவித்து வருகின்றனர். நேற்று பல இடங்களில் சர்கார் படத்துக்காக வைக்கப்பட்ட பேனர்களையும் அ.தி.மு.க வினர் கிழித்து போராட்டம் நடத்தினர். 

இதற்கிடையே நேற்று நள்ளிரவு ``இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய அவரது வீட்டுக்குக் காவல்துறை விரைந்துள்ளது" என சன் பிக்சர்ஸ் நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது. முருகதாஸ் வீட்டில் இல்லாததைத் தெரிந்துகொண்ட போலீஸ் சென்று விட்டனர் எனவும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது. இதனை மறுத்த காவல்துறை, ``வழக்கமான ரோந்துப் பணிக்காகவே அவரது வீட்டின் அருகே சென்றோம். கைது செய்வதற்காக அல்ல" எனத் தெரிவித்திருந்தது. 

இந்தநிலையில் இன்று காலை சர்கார் பட விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார் இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை ஏற்ற நீதிபதி இன்று பிற்பகல் இந்த வழக்கு விசாரிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.