வெளியிடப்பட்ட நேரம்: 14:10 (09/11/2018)

கடைசி தொடர்பு:14:10 (09/11/2018)

`சர்கார்' விவகாரத்தில் விஜய் ரசிக‌ர்கள் சொல்வது என்ன?

சர்கார்

விஜய் நடிப்பில், முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியான படம் 'சர்கார்'. படம் வெளியாவதற்கு முன்பே கதை தொடர்பாகப் பல சர்ச்சைகள் எழுந்தன. திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் வரை விவகாரம் சென்று, பின்பு சுமுகத் தீர்வு காணப்பட்டது. படம் வெளியானதும் அதில் இடம்பெற்றிருந்த சர்ச்சைக்குரிய காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.க-வினர் போர்க்கொடி தூக்கினர். பல இடங்களில் சர்கார் பட பேனர்கள் அகற்றப்பட்டன. இதையடுத்து, பாதுகாப்பு கருதி பல திரையரங்குகளில் காட்சியை ஒத்திவைத்தனர். அமைச்சர்கள் சிலரே சர்காருக்கு எதிராகத் தங்களது கண்டனத்தைப் பதிவுசெய்தனர். முருகதாஸை கைதுசெய்ய  நள்ளிரவில் அவரது வீட்டுக்கு காவல் துறை விரைந்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஒரு ட்வீட்டை தட்டிவிட்டது. போலீஸ் தரப்பிலோ, இது வழக்கமான ரோந்துப் பணிதான் என்றது. ஏ.ஆர். முருகதாஸ் தரப்பில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக விஜய் மக்கள் இயக்கம் பொறுப்பாளர் புஸ்ஸி என்.ஆனந்திடம் பேசினோம். ‘எந்த விதப் பிரச்னைகளிலும் ஈடுபடாமல் இருப்பதையே விஜய் விரும்புகிறார். அதையே தனது ரசிகர்கள் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கருதுகிறார். சர்கார் பேனர்களைக் கிழித்த விவகாரம் தொடர்பாக, அ.தி.மு.க-வினர்மீது ரசிகர்கள் தனிப்பட்ட முறையில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். அதுதொடர்பாக பரிசீலிக்கப்படும்” என்றார்.