வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (09/11/2018)

கடைசி தொடர்பு:16:41 (09/11/2018)

"அரசியல் காழ்ப்புணர்ச்சியை மறந்து பணியமர்த்த வேண்டும்" - மக்கள் நலப்பணியாளர்கள் கோரிக்கை

"காலுக்குச் செருப்பும் இல்லை; கால்வயிற்றுக் கஞ்சியும் இல்லை, பாழுக்கு உழைத்தோமடா தோழா...
பசையற்றுப் போனோமடா, பாலின்றி குழந்தை அழும், சோறின்றி மனைவி அழுவாள், 
வேலையின்றி நான் அழுவேன். வீடு முச்சூடும் அழும்" என்றார் கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவா.

ஜீவாவின் இந்த வரிகள் யாருக்குப் பொருந்துகிறதோ, இல்லையோ தமிழக அரசால் நியமிக்கப்பட்டு, தற்போது வேலையின்றித் தவிக்கும் மக்கள் நலப்பணியாளர்களுக்கு மிகச் சரியாகப் பொருந்தும். தமிழகத்தில் முதல்வராக இருந்த கருணாநிதி, இவர்களை நியமிப்பதும், ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் அவர்களை பணிநீக்கம் செய்வதும் தொடர்கதையாக இருந்துவந்தது. மக்கள் நலத்திட்டங்களை ஜெயலலிதா அறிவிக்கிறாரோ இல்லையோ மக்கள் நலப்பணியாளர்களை பணி நீக்கம் செய்வதை முன்னுரிமையாகக் கொண்டிருந்தார். 1989-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி, கிராமப்புறங்களில் அரசின் நலத்திட்டங்களை மக்களுக்குக் கொண்டுசேர்க்கும் வகையில் ஒரு கிராமத்துக்கு இரண்டு மக்கள் நலப்பணியாளர்கள் வீதம் 25,000 பேரை பணியமர்த்தி உத்தரவிட்டார்.

அதன் பிறகு 1991-ம் ஆண்டில் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் அந்த மக்கள் நலப்பணியாளர்களை பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்தார். தொடர்ந்து 1996-ம் ஆண்டில் கருணாநிதி மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் மக்கள் நலப்பணியாளர்களில் பத்தாம் வகுப்பு தேர்ச்சிபெற்ற 13,500 பேரை மீண்டும் நியமனம் செய்தார். கடந்த 2001-ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, அவர்களை பணி நீக்கம் செய்ய, 2006-ல் மறுபடியும் கருணாநிதி முதல்வரானதும் பணியமர்த்தல் என மக்கள் நலப் பணியாளர்கள் பந்தாடுவது தொடர்ந்தது. அதன்பின்னர் 2011-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் நவம்பர் 8-ம் தேதி அன்று மக்கள் நலப் பணியாளர்கள் அனைவரையும் மீண்டும் பணி நீக்கம் செய்தார். ``கருணாநிதி ஆட்சியில் நியமிக்கப்பட்டவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக, மாறி மாறி எங்க வாழ்க்கையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விளையாடினார். நாங்கள் வேலையிழந்து, நிர்கதியாகத் தவித்தோம்'' என்று கண்ணீரோடு நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்கள் பாதிக்கப்பட்ட மக்கள் நலப்பணியாளர்கள்.

தனமதிவாணன் - மக்கள் நலப்பணியாளர்கள் சங்கம்இந்த நிலையில், தாங்கள் கடைசியாக (2011) பணிநீக்கம் செய்யப்பட்ட நவம்பர் 8-ம் தேதியை நினைவுகூரும் வகையில் மாநிலம் முழுவதும் உள்ள மக்கள் நலப் பணியாளர்கள், சேலம் கலெக்டர் அலுவலகம் எதிரே ஒன்றுதிரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். ஆர்ப்பாட்டத்துக்கு சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ. ராஜேந்திரன், மக்கள் நலப்பணியாளர்கள் சங்க மாநிலத் தலைவர் தனமதிவாணன் மற்றும் ஐம்பதுக்கும் மேற்பட்ட மக்கள் நலப்பணியாளர்கள் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது பேசிய மக்கள் நலப்பணியாளர்கள் சங்க மாநிலத் தலைவர் தனமதிவாணன், ``தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் வாழும் ஏழை, எளிய படித்த ஆண்கள், பெண்கள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்திலும், அரசு நலத்திட்டங்கள் கிராமப்புறங்களுக்குச் சென்றுசேரவும் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் மக்கள் நலப்பணியாளர்களாக நாங்கள் நியமிக்கப்பட்டோம். நாங்கள் பணியில் சேர்ந்து கடினமாக உழைத்து அரசின் நலத் திட்டங்களை மக்களுக்குக் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டோம். 

ஆனால், அடுத்தடுத்து வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, எங்களை அரசியல் காரணங்களுக்காக பணிநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்தார். இதையடுத்து உயர் நீதிமன்றத்தை நாடினோம். எங்கள் வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், `மக்கள் நலப்பணியாளர்களை நிரந்தர ஊழியர்களாக்க வேண்டும்; இல்லையென்றால் மாதம் தோறும் அவர்களுக்கு அரசு ஊதியம் வழங்க வேண்டும்' என்று உத்தரவிட்டது. ஆனால், உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. எங்களுக்கு மீண்டும் வேலை வழங்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டது. ஆனால், எங்களுக்கு இன்றுவரை, தமிழக அரசு வேலை கொடுக்கவில்லை. இதனால் 200-க்கும் மேற்பட்டோர் அதிர்ச்சியிலும், மனநலம் பாதிக்கப்பட்டும், தற்கொலை செய்து கொண்டும் இறந்து போனார்கள். 2011-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதியன்றுதான், மக்கள் நலப் பணியாளர்கள் 13,500 பேர் வேலை இழந்தோம். எங்களின் குடும்பங்களில் இந்தத் தினத்தை கறுப்பு தினமாக அனுசரித்து வருகிறோம். தமிழகத்தில் தற்போது ஆட்சியில் உள்ள அ.தி.மு.க. அரசு, அரசியல் காழ்ப்புஉணர்ச்சிகளை மறந்து, எங்களுக்கு மீண்டும் வேலை வழங்கிட வேண்டும்'' என்றார்.

எம்.எல்.ஏ. ராஜேந்திரன் - மக்கள் நலப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் பனமரத்துப்பட்டி ராஜேந்திரன், "அரசு என்பது அனைத்து மக்களுக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். தி.மு.க. தலைவராக இருந்த கருணாநிதி, கிராமப்புற மக்களுக்கு உதவும் வகையில் மக்கள் நலப்பணியாளர்களை நியமித்தார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் பின்னர் முதல்வரான ஜெயலலிதா, மனசாட்சியே இல்லாமல் 13,500 பேரின் வாழ்வாதாரத்தையும் ஒரே கையெழுத்தில் நாசமாக்கினார். இதனால் பாதிக்கப்பட்டவர்களில் 200-க்கும் மேற்பட்டோர் இப்போது உயிரோடு இல்லை. உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆணையிட்ட பின்னரும், அந்த உத்தரவுகளை மதிக்காமல் அ.தி.மு.க அரசாங்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தற்போதுள்ள மாநில அரசு, அதன் ஆயுட்காலம் எத்தனை நாள் என்று எண்ணிக்கொண்டிருக்கிறது. இந்த ஆட்சி முடிந்ததும், எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமையவிருக்கும் தமிழக அரசு, உங்களுக்கு நிச்சயம் வேலை வழங்கும்" என்றார்.

வேல்விழி - மக்கள் நலப்பணியாளர்கள்ஆர்ப்பாட்டத்தில் தரையில் புரண்டு அழுத வைத்தீஸ்வரன், "என்னோட ஊரு காடையாம்பட்டி பக்கத்தில் உள்ள மாரக்கவுண்டன்புதூர். எனக்குக் காடு, கரையெல்லாம் இல்லை. இந்த வேலையை நம்பித்தான் வாழ்ந்துட்டு இருந்தேன். என் பையனை கல்லூரியில் சேர்த்தேன். வேலை இழந்ததால் அவனுடைய படிப்பு பாதியிலேயே நின்றுவிட்டது. அவன் இப்போது, தனியார் துணிக்கடையில் வேலைக்குப் போகிறான்'' என்று கண்ணீருடன் குறிப்பிட்டார். 

மற்றொரு மக்கள் நலப் பணியாளரான வேல்விழி, "எங்களை முறைப்படி கலெக்டர் அலுவலகத்தில் நேர்முகத் தேர்வு நடத்தித்தான், பணிக்கு நியமித்தார்கள். ஜெயலலிதா ஆட்சி வந்ததும் உடனே எங்களைப் பணிநீக்கம் செய்து விட்டார். இதனால் நாங்கள் அடைந்துள்ள கஷ்டங்கள் கொஞ்சம் நஞ்சமில்லை. எங்களின் வாழ்வாதாரத்தை இழந்து நடுத்தெருவுக்கு வந்து விட்டோம். வேலை இல்லாமல் ஒவ்வொரு நாளும் உணவுக்கும், உடைக்கும் பலரும் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். தற்போதைய அ.தி.மு.க அரசு, எங்கள் மீது கருணைகாட்டி, மீண்டும் எங்களைப் பணியில் அமர்த்த வேண்டும்'' என்றார்.


டிரெண்டிங் @ விகடன்