வெளியிடப்பட்ட நேரம்: 14:27 (09/11/2018)

கடைசி தொடர்பு:14:27 (09/11/2018)

கலைச்செல்வியைக் கொலை செய்தது ஏன்? -  கைதான பெண்கள் அதிர்ச்சி வாக்குமூலம் 

கலைச்செல்வியை கொலை செய்த ஆட்டோ டிரைவர்கள்

 பாலியல் தொழில் போட்டி காரணமாக மதுரையைச் சேர்ந்த கலைச்செல்வியை ஆட்டோ டிரைவர்கள் மூலம் இரண்டு பெண்கள் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மெரீனா நீச்சல் குளத்துக்குப்பின்புறத்தில் உள்ள கடற்கரை மணலில் கடந்த 4-ம் தேதி பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுகிடந்தார். அவரின் சடலம் அரைகுறையாக கடற்கரை மணலில் புதைக்கப்பட்டிருந்தது. அதைப்பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக அண்ணா சதுக்கம் போலீஸ் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பசுபதி சம்பவ இடத்துக்குச் சென்று பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தார். அப்போது, அந்தப் பெண், அரைநிர்வாணமாக இருந்தார். மேலும் சடலத்தின் அருகில் செல்போன் மற்றும் இரண்டு ஜோடி செருப்புகள் கிடந்தன. செல்போன் நம்பரை வைத்து இறந்து கிடந்த பெண் யார் என்று போலீஸார் முதலில் விசாரித்தனர். அப்போது அவரின் பெயர் கலைச்செல்வி, மதுரை என்ற விவரம் தெரியவந்தது. தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது, இரண்டு ஆட்டோ டிரைவர்கள் அங்கு வந்து செல்வது தெரியவந்தது. அவர்கள் யார் என்று போலீஸார் விசாரித்தபோது அவர்கள் குறித்த தகவல்கள் கிடைத்தன. மோகன்குமார் என்கிற பிரேம் (27), அவரின் நண்பர் சூர்யா என்கிற பத்மநாபன் (23) என்று தெரியவந்தது. அவர்களைப் பிடித்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில்,  ``மதுரையைச் சேர்ந்த கலைச்செல்வி, குடும்பத்தைப் பிரிந்து சென்னை வந்துள்ளார். சென்னை மெரினா கடற்கரை பகுதியில் பாலியல் தொழில் செய்துவந்துள்ளார். கலைச்செல்வியுடன் மோகன்குமார், சூர்யா ஆகியோருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சமயத்தில் சென்னை பல்லவன் சாலையைச் சேர்ந்த சத்யா (32), ஷீலா பிரியா (19) ஆகிய இரண்டு பெண்களுக்கு கலைச்செல்வியின் வரவால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், மோகன்குமார், சூர்யா ஆகியோர் மூலம் கலைச்செல்வியை கொலை  செய்ய திட்டமிட்டுள்ளனர். சம்பவத்தன்று மோகன்குமார், சூர்யா, கலைச்செல்வி ஆகியோர் நீச்சல் குளம் பின்புறத்தில் உள்ள கடற்கரை மணலில் அமர்ந்து பேசியுள்ளனர். அப்போது மது அருந்தியுள்ளனர். இந்தச் சமயத்தில் கலைச்செல்வியுடன் ஆட்டோ டிரைவர்கள் மோகன்குமார், சூர்யா ஆகியோர் தகராறு செய்துள்ளனர். அப்போது கலைச்செல்வியை கொலை செய்துவிட்டு சடலத்தை அங்கேயே புதைத்துவிட்டு தப்பிவிட்டனர். ஆனால், செல்போன் மற்றும் செருப்பு மூலம் கொலையாளிகளைக் கண்டுபிடித்துவிட்டோம்" என்றனர்.  

 கொலை வழக்கில் கைதான பெண்கள்

போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ``பாலியல் தொழில் போட்டி காரணமாக இந்தக் கொலை நடந்துள்ளது. கலைச்செல்வியால் பாதிக்கப்பட்ட சத்யா, ஷிலா பிரியா ஆகியோர் தூண்டுதலின்பேரில் இந்தக் கொலையை ஆட்டோ டிரைவர்கள் செய்துள்ளனர். மெரினா நீச்சல் குளம் பின்புறம் பகுதியில் இரவு நேரங்களில் ஆள்நடமாட்டம் குறைவாக இருக்கும். அதைப்பயன்படுத்தி கலைச்செல்வியை கொலை செய்துள்ளனர். மோகன்குமாருக்கு திருமணமாகிவிட்டது. அவர் திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்தவர். சூர்யாவுக்கு இன்னமும் திருமணமாகவில்லை. இந்தக் கொலை சம்பவத்தில் தொடர்புடைய மோகன்குமார், சூர்யா, சத்யா, ஷீலா பிரியா ஆகிய 4 பேரை கைது செய்துள்ளோம். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளோம்" என்றார். 

கலைச்செல்வி கொலை செய்யப்படுவதற்கு முன், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். அவரை கொடூரமாக ஆட்டோ டிரைவர்கள் கொலை செய்துள்ளனர். அதாவது, கலைச்செல்வியுடன் சந்தோஷமாக இருந்த ஆட்டோ டிரைவர்கள் மோகன்குமார், சூர்யா, மது அருந்தியுள்ளனர். அதன்பிறகு, சத்யா, ஷீலா பிரியாவுக்காக கலைச்செல்வியுடன் தகராறு செய்துள்ளனர். அப்போது கலைச்செல்வி அவர்களை எதிர்த்து பேசியுள்ளார். உடனே மணலை அள்ளிய மோகன்குமாரும் சூர்யாவும் அவரின் வாய் மற்றும் மூக்கில் வைத்து அமுக்கியுள்ளனர். இதனால், மூச்சுதிணறிய கலைச்செல்வி சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கலைச்செல்வியை எதற்காக கொலை செய்தீர்கள்? என்று மோகன்குமார், சூர்யாவிடம் போலீஸார் விசாரித்தபோது ``ஆட்டோ சவாரியில் நல்ல வருமானம் கிடைத்ததால் சந்தோஷமாக இருக்க மெரினாவுக்கு வருவோம். அப்போது மது அருந்துவோம். பிறகு சத்யா, ஷீலா பிரியா ஆகியோருடன் சந்தோஷமாக இருப்போம். இந்தச் சமயத்தில்தான் கலைச்செல்வி எங்களுக்கு அறிமுகமாகினார். அவரைச் சந்தித்தபிறகு சத்யா, ஷீலா பிரியாவைச் சந்திப்பதை தவிர்த்தோம். இதனால் எங்களிடம் பேசிய அவர்கள் இருவரும் கலைச்செல்வியை கொலை செய்யுமாறு கூறினர். இதனால்தான் கலைச்செல்வியை கொலை செய்தோம்" என்று வாக்குமூலம் கொடுத்துள்ளனர். அதே தகவலை கைதான சத்யாவும் ஷீலா பிரியாவும் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர். 

பல்வேறு காரணங்களுக்காக கொலைகள் நடப்பது வாடிக்கையாக இருந்தாலும் பாலியல் தொழிலும் போட்டி ஏற்பட்டு கலைச் செல்வி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்ரபை ஏற்படுத்தியுள்ளது. 


டிரெண்டிங் @ விகடன்