வெளியிடப்பட்ட நேரம்: 16:09 (09/11/2018)

கடைசி தொடர்பு:16:09 (09/11/2018)

`அனுமதியின்றி பேனர்களை வைக்கலாமா?!' - விஜய் ரசிகர் மன்றத் தலைவர் மீது வழக்கு பதிவு

`சர்கார்' படத்துக்கு அனுமதியின்றி பேனர்கள் வைத்த குற்றத்துக்காக அரியலூர் மாவட்ட தலைவர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ள சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபடபோவதாக எச்சரித்துள்ளனர்.

மறியலில் விஜய் ரசிகர்கள்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில்  தீபாவளி தினம் முதல் சர்கார் திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், திடீரென நேற்று மாலை போலீஸார் திருச்சி சிதம்பரம் சாலையில் ஜெயங்கொண்டத்தில் உள்ள சி.ஆர் தியேட்டர் முன்பாக அமைக்கப்பட்டிருந்த 19 பேனர்களை அகற்ற வந்தனர். இதற்கு விஜய் ரசிகர் மன்றத்தினர் மற்றும் ரசிகர்கள் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர். `மேலிடத்திலிருந்து அகற்றச் சொல்லி உத்தரவு வந்திருக்கிறது' என உத்தரவு நகலை ரசிகர் மன்றத்திடம் காவல்துறையினர் காட்டினார்கள். இதற்கு ரசிகர், `நாங்கள் பேனர் வைத்தபோது எதிர்ப்பு தெரிவிக்காத நீங்கள் இப்போது எதிர்ப்பு தெரிவிக்க என்ன காரணம் என்று எங்களுக்குத் தெரியும். உங்களைப் பார்க்கவேண்டிய இடத்தில் பார்த்துக்கொள்கிறோம்' என்று காவல்துறையினரிடம் ரசிகர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் ரசிகர்கள் விஜய்யின் பேனர்களுக்குப் பாலபிஷேகம் செய்து அகற்றத் தொடங்கினர். நகராட்சியினர் ஒருபுறம் பேனர்களை அகற்றி நகராட்சி லாரியில் ஏற்றினர்.

இதனால் கடுப்பான ரசிகர்கள் தியேட்டரின் முன்பாக மறியலில் ஈடுபட்டனர். பின்பு போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கலைத்தனர். இந்த நிலையில், அனுமதியின்றி பேனர்கள் வைத்த குற்றத்துக்காக அரியலூர் மாவட்ட விஜய் ரசிகர் மன்றத் தலைவர் சிவா மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. `எத்தனை வழக்குகள் போட்டாலும் அதற்கெல்லாம் நாங்கள் அஞ்சப்போவதில்லை. எங்களுடைய எதிர்ப்பு தொடர்ந்துகொண்டே இருக்கும்' எனக் கொந்தளிக்கிறார்கள் விஜய் ரசிகர் மன்றத்தினர்.