வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (09/11/2018)

கடைசி தொடர்பு:15:20 (09/11/2018)

ஆயுதப்படை காவலருக்கு வினையான `தாயம்' விளையாட்டு!

ஆயுதப்படை காவலர் ஒருவர் குடிபோதையில் தன் சொந்த கிராம மக்களை வம்பிழுக்கும் வீடியோ காட்சிகள் காஞ்சிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அவர்மீது காவல்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கொந்தளிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

போதையில் ஆயுதப்படை காவலர்

காஞ்சிபுரம் பகுதியில் உள்ளது சாலபோகம் கிராமம். சென்னையில் ஆயுதப்படையில் பணிபுரியும் காவலர் அன்பரசன் என்பவர் தீபாவளிக்காக சொந்த ஊரான சாலபோகத்துக்கு வந்துள்ளார். தீபாவளிப் பண்டிகை விடுமுறையில் அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜன் என்பவர் தனது வீட்டுக்கு முன்பு உள்ள காலி இடத்தில் நண்பர்களுடன் கறி சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது, தாயம் விளையாடிக் கொண்டிருந்த நாகராஜின் நண்பர்களிடம் தன்னையும் விளையாட்டில் சேர்த்துக்கொள்ளும்படி அன்பரசன் மிரட்டி இருக்கிறார். போதையில் இருந்ததால் அன்பரசனை நாகராஜின் நண்பர்கள் விளையாட்டில் சேர்த்துக் கொள்ளவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அன்பரசன், ‘இந்தப் பகுதியில் ஏன் வாகனங்களை விட்டிருக்கிறீர்கள். நான் நினைத்தால் உங்களை அடித்து நொறுக்கிவிடுவேன்” என அவர்களிடம் தகராறு செய்தார்.

குடிபோதையில் இருந்த அன்பரசு, அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜனை மிரட்டியும், கடுமையாகத் தாக்கியும் இருக்கிறார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான நாகராஜ் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரைப் பெற்ற உதவி ஆய்வாளர் துளசி, ‘போலீஸ்காரங்க மேலேயே புகார் கொடுக்கறீங்களா…’ எனப் புகார் கொடுத்த நாகராஜை கடுமையாக மிரட்டி அனுப்பிவிட்டார். இதனால் வழக்கு பதியவில்லை. அன்பரசன் கொடுத்த புகாரின் மீது வழக்கு பதியப்பட்டது. இதைத் தொடர்ந்து அன்பரசன் குடிபோதையில் மிரட்டும் வீடியோவும் வெளியானது. காஞ்சிபுரம் எஸ்.பி. சந்தோஷ் ஹதிமானி உத்தரவின் பேரில் அன்பரசன் மீது வழக்கு பதியப்பட்டிருக்கிறது.

ஆயுதப்படை காவலர் அன்பரசன்

``குடிபோதையில் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி இப்பகுதி மக்களை அன்பரசன் தொடர்ந்து மிரட்டி வருகிறார். எல்லோரும் அவர் சொல்வதைத்தான் கேட்க வேண்டும் என அதிகார போதையில் நடந்து கொள்கிறார். அன்பரசன் மீது கடந்த வருடமும் இதே போன்றதொரு வழக்கு பதியப்பட்டுள்ளது. அவர் மீது காவல்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என சாலபோகம் மக்கள் தெரிவிக்கிறார்கள். இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் அதியமானிடம் பேசினோம். ``சென்னை மாநகர காவல்துறையைச் சேர்ந்தவர் அன்பரசன். அன்றைக்கு ஏற்பட்ட தகராறு வீடியோ எங்களுக்கு வந்திருக்கிறது. இரண்டு தரப்பினரும் தனித்தனியாகப் புகார் அளித்துள்ளார்கள். அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் இரண்டு வழக்குகள் தனித்தனியாக போடப்பட்டுள்ளன. யார் மீது தவறு  இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதியளித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க