வெளியிடப்பட்ட நேரம்: 15:35 (09/11/2018)

கடைசி தொடர்பு:15:35 (09/11/2018)

`பன்றிக்காய்ச்சலுக்கு ஊசி வேண்டாம், மாத்திரைகளே போதும்' - அமைச்சர் விஜயபாஸ்கர்

``ன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாராசிட்டமால் ஊசியைப் பயன்படுத்தாமல் மாத்திரைகளை மட்டும் அளிக்க வேண்டும்`` என மருத்துவர்களுக்கு, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார்.

அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜீவ் காந்தி மருத்துமனைக்குச் சென்று காய்ச்சல் பிரிவில் ஆய்வு மேற்கொண்டார்.  காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர், ``தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் பரவாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பன்றிக்காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்காக அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் சிறப்பு கவனம் எடுத்துச் செயல்பட்டுவருகின்றனர். அனைத்து மருத்துவமனைகளிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பன்றிக்காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் சரியான நேரத்தில் வந்து சிகிச்சை எடுத்தால் குணமாகிவிடும். இதுவரையில் 33 பேர் பன்றிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவருக்கு மட்டும் பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

காய்ச்சல் வந்துவிட்டாலே இறப்பு வரும் எனக் கூற முடியாது. ஏற்கெனவே, நுரையீரல் பிரச்னை, இதயக் கோளாறுகள், அதிக ரத்தஅழுத்தம், காசநோய் பாதிப்பிருப்பவர்களுக்கு இந்தக் காய்ச்சல் தாக்கும்போதுதான் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. 

காய்ச்சல், தொண்டைவலி உள்ளவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். அனைத்து மருத்துவமனைகளிலும் பன்றிக்காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்கள் பாராசிட்டமால் ஊசியைப் பயன்படுத்தாமல் மாத்திரைகளை மட்டும் அளிக்க வேண்டும்" என்றார் அவர்.