3 நாள்களில் 11 பேர் பலி - கோவையை மிரட்டும் காய்ச்சல்கள்! | Coimbatore: 11 died in 3 days for fever

வெளியிடப்பட்ட நேரம்: 16:05 (09/11/2018)

கடைசி தொடர்பு:16:05 (09/11/2018)

3 நாள்களில் 11 பேர் பலி - கோவையை மிரட்டும் காய்ச்சல்கள்!

கோவை அரசு மருத்துவமனையில் பன்றி மற்றும் டெங்கு காய்ச்சலால் கடந்த 3 நாள்களில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 

கோவை அரசு மருத்துவமனை

கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மற்றும் சேலம் முதலிய மேற்கு மாவட்டங்களில் பன்றிக் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் மற்றும் மூளை காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவை அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிறப்பு வார்டு தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், உயிரிழப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

இந்நிலையில், பீளமேடு பகுதியைச் சேர்ந்த காயத்ரி (28) கடந்த ஒரு வாரமாகக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனிடையே, சிகிச்சை பலனின்றி காயத்ரி உயிரிழந்தார்.

அதேபோல, கோவை மாவட்டம் சூலூரைச் சேர்ந்த புஷ்பா (40) பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். கடந்த 3 நாள்களில் மட்டும் கோவை அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் 11 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த இரண்டு மாதங்களில் டெங்கு, பன்றி மற்றும் மர்மக் காய்ச்சலுக்கு 43 பேர் உயிரிழந்துள்ளனர். இது கோவை மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.