வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (09/11/2018)

கடைசி தொடர்பு:17:43 (09/11/2018)

பாலியல் வழக்கு! - சென்னை போலீஸுக்குக் கண்ணாம்பூச்சி காட்டும் சதுர்வேதி சாமியார்

சதுர்வேதி சாமியார்


சதுர்வேதி சாமியாரை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். மீடியாக்களில் 2004-ம் ஆண்டில் தலைப்புச் செய்தியாக வந்த சதுர்வேதி சாமியாரை தேடப்படும் குற்றவாளியாக போலீஸார் அறிவித்துள்ளனர்.

யார் இந்த சதுர்வேதி சாமியார்?

சதுர்வேதி சாமியார், சென்னை ஆழ்வார்பேட்டையில் அறக்கட்டளையும் தி.நகரில் ஆசிரமத்தையும்  நடத்தினார். மணிக்கணக்கில் ஆன்மிக பிரசாரம் செய்யும் புலமை பெற்ற சதுர்வேதி சாமியாரைத் தேடி பக்தர்கள் கூட்டம் அலைமோதின. அவர், சொல்வதெல்லாம் நடப்பதாக பக்தர்கள் தெரிவித்தனர். இதனால் சதுர்வேதி சாமியாரிடம் ஆசி பெறவே தி.நகர் ஆசிரமத்தில் பக்தர்கள் வரிசையாக காத்திருந்தனர். இன்முகத்துடன் அனைவருக்கும் அருளுரையும் ஆசியையும் வழங்கி வந்த சதுர்வேதி சாமியார் மீது, கடந்த 2004-ம் ஆண்டு தாயும் மகளும் சேர்ந்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் பாலியல் புகார் கொடுத்தனர். ஹைதராபாத்துக்கு கடத்திச் சென்று மானபங்கம் படுத்தியதாக புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தக் குடும்பத் தலைவரும் சாமியார் தன்னை மிரட்டி பல லட்சம் ரூபாயை அறக்கட்டளைக்கு நன்கொடையாக வாங்கியதாகவும் தன்னுடைய வீட்டை அபகரித்ததாகவும் குற்றம்சாட்டினார். இவர்களைத் தொடர்ந்து சாமியார் சதுர்வேதி மீது அடுத்தடுத்த புகார்கள் வரத்தொடங்கின. இதனால் சாமியார் சதுர்வேதியிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. புகார்களின்பேரில் கைதான சாமியார் சதுர்வேதி சிறையில் அடைக்கப்பட்டார்.

சாமியார் சதுர்வேதிக்கு பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். மேலும், அவரின் வங்கி லாக்கரை போலீஸார் ஆய்வு செய்தபோது அதில் தங்கத்தில் பூணூல் மற்றும் வெள்ளிப் பொருள்கள், தங்கத்திலான பொருள்கள் இருந்தன. அவற்றை போலீஸார் பறிமுதல் செய்ததோடு சொத்துகள் பட்டியலையும் சேகரித்தனர். தொடர்ந்து சாமியார் சதுர்வேதி மீது 23 பிரிவுகளின் கீழ் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில் குண்டர் தடுப்புக் காவல் சட்டமும் அடங்கும். 6 வழக்குகளில் ஜாமீன் பெற்ற சதுர்வேதி சாமியார், குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தை நீதிமன்றத்தின் மூலம் ரத்துசெய்தார். இதனால் வெளியில் வந்த சதுர்வேதி சாமியாரும் அவரின் பக்தர்களும் மகிழ்ச்சியடைந்தனர். சதுர்வேதி தரப்பில் நீதிமன்றத்தில் இந்த வழக்குகளை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மேலும், 2008-ல் அவரின் வழக்கறிஞர் தாமோதரன், `சட்டத்தை மதிக்கும் சதுர்வேதியோட வேதப்புலமையை போலீஸார் அவமரியாதை செய்கின்றனர். அவர் மீது பொய்யாக வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். நீதிமன்றத்தில் குற்றமற்றவர் என்று நிரூபித்து அவர் வெளியில் வருவார்' என்று  கூறினார். 

சதுர்வேதி சாமியார் மீதான வழக்கு விசாரணை சென்னை மகளிர் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இந்த வழக்கில் கடந்த 2016-ல் சாமியார் சதுர்வேதி ஜாமீனில் வெளியில் வந்தார். அதன்பிறகு அவர் தலைமறைவாகிவிட்டார்.  அவரை சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் பல இடங்களில் தேடினர். ஆனால், அவரைக் கண்டுபிடிக்கமுடியவில்லை. இதனால் அவரைத் தேடப்படும் குற்றவாளியாக போலீஸார் அறிவித்துள்ளனர். அவரின் புகைப்படம் அனைத்து விமான நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``சாமியார் சதுர்வேதியை அவ்வளவு எளிதில் மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். சாமியாரின் வழக்கு பல்வேறு கட்டங்களைக் கடந்து விரைவில் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. இந்த நிலையில், ஜாமீனில் வெளியில் வந்த சாமியார் சதுர்வேதி கடந்த இரண்டு ஆண்டுகளாக வழக்கின் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால்தான் அவரைத் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளோம். சாமியார் சதுர்வேதிக்கு வெங்கடா சரவணன், பிரசன்ன வெங்கடாச்சாரியார் என பல பெயர்கள் உண்டு. அவர், அடிக்கடி ஆன்மிகப் பயணமாக வடமாநிலங்களுக்குச் செல்வதுண்டு. இதனால் வடமாநிலத்தில் அவர் தலைமறைவாக இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். இதனால்தான் அவரைப் பிடிக்க அனைத்து விமான நிலையங்களையும் உஷார்படுத்தியுள்ளோம்" என்றார். 

கடந்த 14 ஆண்டுகளாக நடந்துவரும் சாமியார் வழக்கில், தேடப்படும் குற்றவாளியாக சதுர்வேதி அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.