வெளியிடப்பட்ட நேரம்: 16:54 (09/11/2018)

கடைசி தொடர்பு:16:54 (09/11/2018)

`அவங்கள பார்த்து கேளுங்க; எங்கள பார்த்துக் கேட்காதீங்க!’ - திருமண விழாவில் பிரேமலதா ஆவேசம்

கடலூர் மாவட்டம், பண்ருட்டி முன்னாள் எம்.எல்.ஏ-வும் தே.மு.தி.க கடலூர் மாவட்டச் செயலாளருமான சிவக்கொழுந்து
இல்லத் திருமண விழாவை இன்று பண்ருட்டியில் உள்ள திருமண மண்டபத்தில் தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த் கலந்துகொண்டு நடத்திவைப்பதாக இருந்தது. இந்நிலையில் அவர் வராததால் அவரின் மனைவியும் தே.மு.தி.க பொருளாளருமான பிரேமலாதா விஜயகாந்த் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.  

திருமணத்தை நடத்தி வைத்த பிரேமலதா

அப்போது பேசிய அவர், ``கடலூர் மாவட்டம் தே.மு.தி.க-வின் கோட்டை. விஜயகாந்த்துக்கு முதல் வெற்றியைக் கொடுத்ததும் கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாசலம் தொகுதிதான். பொருளாளராக நான் பொறுப்பேற்ற உடன் கலந்துகொள்ளும் முதல் திருமண
விழா இதுதான். கடலூர் என்றாலே அது கேப்டனின் கோட்டை. தி.மு.க, அ.தி.மு.க போல் இல்லை. தலைவரை தொண்டர்கள் வாங்க கேப்டன் என்று சொல்கிற ஒரே கட்சி தே.மு.தி.க-தான். இன்று நடக்கும் ஆட்சி ஊழல் ஆட்சி. முதல்வர் ஊழலை விசாரிக்க வேண்டியவர் ஐஜி விஜிலன்ஸ் முருகன். இவர் மீது பாலியல் குற்றச்சாட்டு. இவரை விசாரிக்க வேண்டியவர் டி.ஜி.பி ராஜேந்திரன். இவர் மீது ஊழல் வழக்கு இருக்கு. இவரை விசாரிக்க வேண்டியவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இவர் மீது சி.பி.ஐ வழக்கு தொடர்ந்துள்ளது. முதல்வரை விசாரிக்க வேண்டியவர் ஆளுநர். ஆனால், ஆளுநர் மீது நிர்மலா தேவி வழக்கு இருக்கிறது. இப்படி உள்ளது இன்றைய ஆட்சியின் நிலை.

தீபாவளிக்கு 2 மணி நேரம்தான் வெடி வெடிக்க வேண்டும் எனச் சொல்கின்றனர். ஏன் டாஸ்மாக்கை 2 மணி நேரம்தான் திறப்போம் என்று கூற வேண்டியதுதானே. தீபாவளிக்கு மட்டும் 670 கோடி வருமானம் கிடைத்துள்ளது. டெங்கு, காய்ச்சல் மர்மக் காய்ச்சல் என்று சொல்கிறார்கள். இதைக் கட்டுப்படுத்த வேண்டிய அமைச்சர்கள் ரெய்டு என்ன செய்வது எனத் தெரியாமல் விழித்துக்கொண்டு உள்ளனர்.
இதையெல்லாம் சரி செய்ய வேண்டிய பிரதமர் மோடி, உலகத்திலேயே உயரமான சிலையைத் திறந்துள்ளார். இந்தியாவில் மதங்களை வைத்து, சாதியை வைத்துப் பிரிப்பவர்கள் மத்தியில் இன்று சிலையை வைத்துப் பிரித்தாளும் நிலை இந்தியாவில் உள்ளது.

மத்தியிலும் மாநிலத்திலும் ஒரு நல்ல ஆட்சி வர வேண்டும் என்பதே தே.மு.தி.க-வின் நிலை. பட்டாசு வெடிப்பது நல்லதா, கெட்டதா என்று கேட்டால் அது நல்லது என்றுதான் சொல்வேன். இந்தத் தொழிலை நம்பி ஏராளமான கூலித் தொழிலாளர்கள், முதலாளிகள் உள்ளனர். வியாபாரம் செய்யும் வியாபாரிகள் உள்ளனர். அதற்கு மேல் தீபாவளி அன்று ஒருநாள் மக்கள் மகிழ்ச்சியாகப் பட்டாசு வெடித்தால் என்ன தவறு. பட்டாசு வெடித்ததால் அந்தப் புகையால் டெங்கு, மர்மக் காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுக்கள் அழியுமே தவிர, சுகாதார சீர்கேடு ஏற்படும் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இன்று தமிழ்நாட்டில் பல விஷயங்கள் நடந்துகிட்டு இருக்கு. தினம் ஆளாளுக்கு கட்சி ஆரம்பிக்கின்றனர். ஆனால், 40 ஆண்டுகளுக்கு முன்னாள் ரசிகர் மன்றம் ஆரம்பித்து, பல கிளைகளை உருவாக்கி, பின்னர் தே.மு.தி.க என்ற மாபெரும் கட்சியைக் கேப்டன் உருவாக்கினார். தே.மு.தி.க மூன்றாவது கட்சி என்று கூறுகின்றனர். ஆனால், உண்மையில் தே.மு.தி.க-தான் தமிழகத்தில் முதன்மையான கட்சி. என்னிடம் வந்து உங்கள் வாங்கு வங்கி என்ன என்று கேட்கிறார்கள். ஜெயலலிதா இருந்தபோது
இருந்த வாக்கு வங்கி இப்ப 5 பிரிவாகப் பிரிந்த பிறகு இருக்கா. அங்க போய் கேளுங்கள். தி.மு.க-வின் வாங்கு வங்கி கருணாநிதி மறைவுக்குப் பிறகு இருக்கா. இதை எந்தப் பத்திரிகையாளராவது கணிக்க முடியுமா. ஆர்.கே.நகரில் டெபாசிட் வாங்கல தி.மு.க. அதனால் யாருக்கும் சளைத்த கட்சியாகத் தே.மு.தி.க இல்லை. அதனால் வரும் உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் எந்தத் தேர்தலாக இருந்தாலும் அதைச் சந்தித்து அகில அளவில் முதன்மையான கட்சி தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் என்பதை நிரூபிப்போம் எனக் கூறிக்கொள்கிறேன்'' என்று பேசினார்.