வெளியிடப்பட்ட நேரம்: 15:24 (09/11/2018)

கடைசி தொடர்பு:15:29 (09/11/2018)

`இலவச டி.வியை எரித்திருந்தால் மகிழ்ச்சியா?’ - முருகதாஸ் ஜாமீன் வழக்கில் நடந்த வாதம்

இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸை வரும் 27-ம் தேதி வரை கைது செய்யத் தடை விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். 

முருகதாஸ்

கடந்த ஒருவாரமாக தமிழகம் முழுவதும் ஒலித்துக்கொண்டிருக்கும் ஒரு பெயர் `சர்கார்'. விஜய் நடிப்பில், ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியான சர்கார் படம் ஆளும் கட்சியினரின் கடும் எதிர்ப்புக்கு ஆளாகியுள்ளது. இத்திரைப்படத்தில், அ.இ.ம.மு.க என்ற கட்சியின் தலைவராகவும் மாநிலத்தின் முதல்வராகவும் மாசிலாமணி என்ற பெயரில் பழ.கருப்பையா நடித்துள்ளார். இதில், மாசிலாமணியின் மகளாக கோமளவள்ளி என்ற பெயரில் நடிகர் சரத்குமாரின் மகள் வரலெட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். `இதில், அரசால் வழங்கப்பட்ட இலவச மிக்ஸி, கிரைண்டர்களை மக்கள் தீயில் போடுவதுபோல காட்சி வைக்கப்பட்டுள்ளது. கோமளவள்ளி என்பது மறைந்த முதல்வரின் இயற்பெயராகும். அரசு வழங்கிய இலவசப் பொருள்களை தீயில் போடுவது என்பது அரசை அவமதிக்கும் காட்சிகள்' என அ.தி.மு.க-வினர் பரவலாகக் குற்றம் சாட்டிவந்தனர். 

நேற்று தமிழகம் முழுவதும் சர்கார் திரையிடப்படும் பல தியேட்டர்களில் வைக்கப்பட்டிருந்த சர்கார் பட பேனர்களைக் கிழித்து அ.தி.மு.க-வினர் போராட்டம் நடத்தினர். மேலும் நள்ளிரவு இயக்குநர் முருகதாஸ் வீட்டின் முன் போலீஸ் குவிக்கப்பட்டதால் இந்தப் பிரச்னை பூதாகரமானது. இதையடுத்து, இன்று காலை இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் சார்பில் முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. 

இந்த நிலையில், இன்று பிற்பகல் நீதிபதி இளந்திரையன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. முதலில் வாதாடிய அரசு வழக்கறிஞர், இந்தப் படத்தில் அரசு வழங்கிய இலவசப் பொருள்கள் எரிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயர் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார். இவரை அடுத்து வாதிட்ட முருகதாஸ் தரப்பு வழக்கறிஞர், சர்ச்சையான காட்சியாக கூறப்பட்டவற்றை நீக்கி விட்டதாகத் தெரிவித்தார். 

இவர்களைத் தொடர்ந்து பேசிய நீதிபதி, இது வெறும் சினிமா மட்டுமே. இதை சினிமாவாகவே பார்க்க வேண்டும். சர்கார் படத்துக்கு தணிக்கை சான்றிதழும் வழங்கப்பட்டுவிட்டது. இப்போது எப்படி பிரச்னை செய்கிறீர்கள் எனக் கேள்வி எழுப்பினார். மேலும் அதில் மிக்ஸி கிரைண்டர் போன்றவற்றுடன் டி.வியையும் எரித்திருந்தால் உங்களுக்கு மகிழ்ச்சியா என அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார். பின்னர், வரும் 27-ம் தேதி வரை இயக்குநர் முருகதாஸை கைது செய்யத் தடை விதித்த நீதிபதி, வழக்கை அன்றைய தினம் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.