வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (09/11/2018)

கடைசி தொடர்பு:18:20 (09/11/2018)

`திட்டமிட்டே சர்காரில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன!’ - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் காட்டம்

அம்மா பேரவை பெண்களுடன் ஆர் பி உதயகுமார்

``சர்கார் திரைப்படத்தில் திட்டமிட்டே சர்சைக்குரிய காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன'' என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் மதுரையில் உள்ள கட்சி அலுவலகத்தில் அம்மா பேரவை சார்பில் இன்று ஆலோசனை நடைபெற்றது. பெண்கள் மட்டுமே பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், `சர்கார்’ படத்தின் சர்ச்சைக்குரிய கருத்துகளை நீக்க வேண்டும் என்று கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ``ஒரு தனி நபரின் சுயநலத்துக்காக எம்.எல்.ஏ பதவியை இழந்துவிட்டோமே என்ற வருத்தத்தில் உள்ளனர். தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் கழகத்தில் மீண்டும் இணைய காலம் உள்ளது. விலையில்லா சைக்கிள், திருமண உதவித் திட்டம், பெண் கல்வி ஊக்குவிக்கும் திட்டம், தாலிக்கு தங்கம், மற்றும் 1.8 கோடி மதிப்புள்ள விலையில்லா மிக்ஸி கிரைண்டர், மடிக்கணினி, விலையில்லா சைக்கிள், கறவை மாடு, ஆடு, பசுமை வீடு போன்ற என்ற எண்ணற்ற திட்டங்களையும், ஜெயலலிதாவின் புகழுக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் சர்கார் படத்தில் கொச்சைப்படுத்தி  வைக்கப்பட்டுள்ள காட்சிகள் உடனடியாக நீக்க வேண்டும் என அம்மா பேரவை சார்பில் பெண்கள் தீர்மானம் போட்டுள்ளார்கள்.

சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படும் என்று அறிவித்தற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். இதுபோன்ற சம்பவங்கள் வருங்காலத்தில் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. இதை விவாதிப்பதற்கு யாருக்கும் எந்தவிதமான தகுதியும் இல்லை. அம்மாவால் பலன் அடைந்த பழ.கருப்பையா தற்போது அம்மாவை விமர்சித்து வருகிறார். திரைப்படம் மக்களின் பொழுதுபோக்குக்காக எடுக்கப்பட்டது. இதில் சர்ச்சைக்குரிய காட்சிகள் என்பது ஏற்புடையது அல்ல. அவர்கள் அரசியலுக்கு தாராளமாக வரலாம். ஆனால், இதுபோன்ற தவறான கருத்துகளைத் திணிக்க வேண்டாம். அரசியல் அமைப்பை பொதுநோக்கோடு விமர்சனம் செய்யலாம். ஆனால், சர்கார் திரைப்படத்தில் திட்டமிட்டே காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள முதல்வர், அமைச்சர் உட்பட அனைவருமே விமர்சனங்களைக் கடந்துதான் வந்துள்ளோம். இது அண்ணா காலத்திலிருந்தே உள்ளது” என்றார்.